சராசரிக்கும் சற்று உயரத்தில் (ஹைட் இல்லை) உள்ள அப்பா. மிக சராசரியான மகன். பிரச்சினைகள், முழுக்க முழுக்க சராசரி. வீட்டுக்கு வீடு கதவு மேட்டர் தான். அப்பாவாக மிஸ்டர் மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி இருக்க, அவரின் சாதாரண மகனாக ஹரிலால் இருக்க, அந்த கதை தேசத்திற்கு தீனியாகி விட, படமாகவும் ஆடிவிட்டது.
வழக்கம் போல இதற்கும் நெருக்கடி குடுத்து சிலர் பிரபலம் ஆகிவிட்டார்கள் போல.
படம் பார்க்க போன தியேட்டரில் மயான அமைதி. யாராவது சதிதிட்டம் தீட்ட அந்த இடம் ரொம்பவும் வசதியாக இருந்திருக்கும். திரும்ப திரும்ப எண்ணியும் தலை கணக்கு 15க்கு மேல் தாண்ட மாட்டேன் என்றது.
காந்தி – பல பேரால் வெறுக்கபட்ட ஒரு பிரபலம். ஒரு தடவை என் தோழியிடம் காந்தி எனக்கு பிடிக்கும் என சொல்லி, அவள் மிகவும் டென்ஷன் ஆகி, பிறகு ரோஸ் எல்லாம் குடுத்து சமாதானபடுத்தினேன். எல்லா பெரிய மனுஷர்களும் வெளி வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி, வீட்டு கதவின் உள்ளே வாழும் வாழ்க்கையை முடிந்தவரை சதாமின் சுரங்க வாழ்க்கை போலத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் தான் பலருக்கு (முக்கியமாக பத்திரிக்கையாள மக்கா) பிரபலங்களின் வீட்டு ஹால் வரை நடந்து அவர்களின் தினசரி உட்கார்தல், நடத்தலை பார்க்க ரகசிய ஆர்வமுண்டு.
அப்படி காந்தியின் வாழ்க்கையை எட்டிபார்த்த படம். சே சே, இல்லீங்க. அவருக்கு ஹரிலால் என்றொறு மகன் இருந்தானா என கேட்கும் அளவிற்கு போன அந்த தவமாய் தவமிருந்து பிள்ளையை எட்டி பார்த்த கதை இது.
சவுத் ஆப்ரிக்காவில் தொடங்கி, எங்கோ மூலையில் யாரும் கவனிக்காத ஒரு தெரு மூலையில் படம் dissolve ஆகிறது. படம் முடிந்தவுடன், உட்கார்ந்திருந்த 15 பேரும், எழுந்திருக்க பல நிமிடங்கள் ஆனது. இதில், கிண்டல் செய்வதற்காகவே வந்திருந்த ஒரு சிறு நண்பர்கள் கூட்டமும்.
Dhoom எடுத்த அதே பாலிவுட் மக்கள் தான் தைரியமாக, பைசா வராது என்று தெரிந்திருந்தும், இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். அனில் கபூரின் முதல் தயாரிப்பாம். ரொம்ப தில் அதிகம் தாங்க உங்களுக்கு.
அப்பா-மகன், ஒரு தீராத சரஸ்வதி நதி பிரச்சினை (இருக்கும் என்று தெரியும், எங்கிருக்கிறது என்றால் திரு திரு முழி முழி தான்). அப்பா, கொள்ளை ஆசை வைத்திருந்தாலும் மகனிடம் கொட்டிவிட மாட்டார். மகன், அன்புக்கு ஏங்கி ஏங்கியே பாதை ஒதுங்கி, வாழ்க்கை வீணாக்கி, பொத்தாம் பொதுவாகி விடுவார். அப்பா, செய்ய வேண்டியதை செய்யவில்லையே என கடைசியில் வருந்தி, நாலு பேரின் தோள்களில் நின்று போன இதயத்துடன் கடைசி பயணம் போவார். நிஜத்திலும் இது போல நிறைய. காந்தி-ஹரிலாலும் கடைசியில் மனிதர்கள் தான். அதே பிரச்சினை தான். ஆனால், கொழுந்து விட்டு எரியவில்லை. வேறு மாதிரி சொல்லவேண்டுமென்றால், அதை விட கொழுந்து விட்டெறிய பல பிரச்சினைகள் இவர்களின் முன் இருந்தது. அப்போதைய மக்களுக்கு அது பெரிசாக படவில்லை. இப்போது, காந்தி பாலிவுட்டின் கெஸ்ட் கதாபாத்திரம். அடிக்கடி சக்ஸஸ் பார்முலாவாக இருக்கிறார். சரி எடுத்துடலாம்பா என எடுத்துவிட்டார்கள்.
சரித்திரம் குறைத்து, குடும்பம் குழைத்து காந்தி காதை சொன்னது நன்றாகவே இருந்தது. யாரோ ஒரு டீ கடைகாரர், என்னோட பாபூ இறந்துட்டாரு. இனிமே நான் அனாதை. எனக்கு நீ தர காசு வேண்டாம் என அவரின் மகனிடமே சொல்வது. மகன், கிட்டத்தட்ட பிச்சைகாரனாகி விட்ட நிலைமையில், நான் தான் அவரின் மகன் என சொல்லகூட திராணி இல்லாமல் ஹரிலால் திரும்பி நடப்பது என கடைசியில் கொஞ்சம் நெஞ்சம் கணம் தான். மகாத்மாவின் மகனென்று தெரியாமலேயே உயிர்விட்டு, கடைசியில் நினைத்ததை சாதித்துவிட்டாரா இல்லை தோற்றுவிட்டாரா ஹரிலால் என பெரிதாக தீர்ப்பு எல்லாம் சொல்லவில்லை. இது நடந்தது. தெரிந்து கொள்ளுங்கள் என ஒரு நல்ல brave attempt இந்த படம்.
அடித்து சொல்லலாம், இந்த படம் கண்டிப்பாக ஓடாது. ஓடாமல் இருக்க வைக்க, கலர் கலராக பல படங்கள் லைன் கட்டி நிற்கின்றன. அலுவலகத்தில் ஒரு விஷயம் நடக்கும். எதாச்சும் சிறிய விஷயமாக இருந்தால் கூட, ஒரு மெயில் அனுப்பிடுப்பா. அட்லீஸ்ட், மெஸேஜ் பாஸ் ஆகிடும். பாக்கிறாங்களோ இல்லையோ. நிறைய கேள்விபட்டிருக்கலாம். அதே மெஸேஜ் பாஸ் மன்னாரு தான் இதுவும். அனில் கபூருக்கு பணம் வரும் என்ற நம்பிக்கையை விட, வராது என்ற நம்பிக்கைதான் அதிகம் இருந்திருக்கும். ஆனால், பதிந்து விட்டார். சினிமா – இந்த பதிவை நீண்ட நாட்களுக்கு நீடிக்க வைக்க நல்ல ஊடகம். அனில் கபூர் சார் & Feroz Abbas khan sir, அடுத்த படம் இந்த மாதிரியே எடுப்பீர்களா? எடுத்தால் ஒரு 15 பேர் உங்களுக்கு கண்டிப்பாக தேருவார்கள்.