மண்ணுயிர்

இத்தனைஇருள் பழகவில்லை. நான் தேவைப்படாத ஒருஇடத்தில் சிக்கி கொண்டுள்ள உணர்வு ஓங்கியிருந்தது. தலைக்கு மேல் அடர்த்தியான ஈர்த்துபோனகயிறுகள். தொட்டுப்பார்த்து உணர்ந்ததில் கயிறாகவும், ஓங்கி வளர்ந்த மரத்தின் வேராகவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. எவை எப்படியோ, நான்இருக்கும், இருந்த இடமில்லை. என் துணை எவருமில்லை. பேச முடியவில்லை. உடல் உணரப்படவில்லை. நினைப்பதுசரியில்லை என்றாலும், அது தான் நடந்திருக்கிறது. காலம் கடந்திருக்கிறேன்

வலியின்றிஇருக்கும் உலகு இப்படித்தான் இருக்குமென்றால்இவை இருந்து விட்டு  போகட்டும். ஆனால், ஏன் சிந்திக்கிறேன்? என்இனம் சொன்னது, இறந்த பின் நான் மேலுலகம்செல்ல வேண்டும் அல்லது கருந்துளைக்குள் வட்டமிட வேண்டும். நான் இருக்குமிடம் (இல்லாமல்இருந்தாலும், இருக்குமிடம் என்றே சொல்ல முடியும்), இவற்றின் எதிலும் சிக்கவில்லை. சிந்தித்துக்கொண்டே, கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் நிலை, எத்தனை நாள் தாக்கு பிடிக்கமுடியும்? இறவா நிலை இப்படிஒரு சிக்கலை கொண்டிருக்கும் என நினைக்கவில்லை. செய்துதான் பார்ப்போமே என்று செய்தது, எனக்கு நன்மை பயந்தது. யாராவது இருக்கிறீர்களா என ஆழ்ந்த மனநிலையை மட்டும் கொண்டேன். கடும் மௌனம், பாலைவன இருட்டு, ஆனால் உணர்வில் மட்டும் தலை மேலும் பக்கவாட்டிலும்கயிறுகள். இவை எங்கோ எனக்குபரிச்சயம். கேள்விகளின் மத்தியில், இந்த உண்மை மட்டும்இருண்டு கிடந்தது. பதில் வந்தது, பல மணிஇங்கேஎது மணிபல கேள்விகளின் பின்என் காலுக்கு கீழே இருந்து ஒலி.

வருகைக்குநன்றி, என்றது குரல்.

நான்எங்கே வந்தேன். என்னை இழுத்து வந்தாகி விட்டது, என்றேன்.

நீ இங்கே வர வேண்டியது அவசியம், வந்தாகி விட்டாய்.

கேள்விகேட்கிறேன், பதில் சொல்ல முடியுமா?

நான்பதில்கள் மட்டுமே. கேள், நீயே அறிவாய்.

என்அறிவுக்கு எட்டியவரை மனிதர்கள் காலமாகி விடுவது வழக்கம். நான் காலமாகி விட்டேனா?

இல்லை. நீ இப்போது உயிராகி இருக்கிறாய்.

உயிராகி, உடலுமாகி, அந்த உடல் சிதிலமாகிதானே இங்கே வந்துள்ளேன். ஒரு வேளை, நான்இப்போது கருவாய் ஒரு பெண்ணுக்குள் சென்றுகொண்டிருக்கிறேனா? அதை தான் நான்உயிராகி இருக்கிறேன் என்கிறீர்களா?

இல்லை. நீ உயிராகி இருக்கிறாய், ஆனால் நீ நினைக்கும் உயிரில்லை. நீ பார்த்த உயிர்

புரியவில்லையே.

நீ விதை.

நான்விதையாகி விட்டேனா? விண்ணுலகம் எல்லாம் பொய்யா? மண்ணுலகம் தான் நாங்கள் நினைத்தவிண்ணுலகமா? மண் வாழ்க்கை பெயர்த்தால்விண் வாழ்க்கை தானே அடுத்த படி. அது தானே எங்கள் மறைசொன்னது. அது தானே எங்கள்கடைசி புள்ளியாய் இருந்தது.

அதுதவறு. அது புரிந்து கொள்ளஒவ்வொருவரும் இறக்க வேண்டும். இறந்து பிறக்க வேண்டும். அடுத்த பிறவி உனக்கு உண்டென்றால், அது மண்ணுலகில் தான். விண்ணுலகில் சுயம் பெற நீ விண்ணுலகபிறவி இல்லை. உன் ஆதி, இந்தமண்ணில் தரித்தது. ஆதியின் அத்தனை வித்துக்களும், மண் மீதே உடல்பெறும், மண் மீதே அறம்கொண்டும் அறம் கிளைத்தும் அறம்திரித்தும்வாழும். இத்தனையும் மண்ணில் நடந்து, கடைசி பகுதி மட்டும் எப்படி விண்ணுக்குள் போகும்? நீ மண். மண்ணில்தான் உன் முதல், முடிவு, மறுபடியும் முதல்.

சரி, அப்படியே இருக்கட்டும். நான் மட்டும் ஏன்பேசுகிறேன். பதில் பெறுகிறேன். மற்ற, மனிதர்கள், மன்னிக்கவும் விதைகள், ஏன் பேசவில்லை?

உன்விளைவு, உன் வாழ்க்கையில் இருந்துஎடுக்கப்பட்டது. உன் போல் பலர்உள்ளனர், அவர்கள் அவர்களின் பதில் பெற்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

எப்படிவிதையானேன்?

உன்சக உயிரினங்கள், நீ சுமந்த உடலைஎன்ன செய்தார்கள் என எண்ணிப்பார். உனக்குபுரியும். நீ புதைக்கப்படுவாய், அல்லது எரிக்கப்படுவாய். எது செய்தாலும், மண் உன்னை உள்கொள்ளும்.  உட்கொள்ளப்பட்டநீ, விதையாவாய். உன் அடுத்த கேள்விஎனக்கு தெரியும். அதன் பதில் இதோ. நீ என்ன விதையாவாய் என்பதைமண் தாண்டி முளைத்த இன்னொரு மரம் தேர்ந்தெடுக்கும். உன் அறம்அத்தனையும் நிறுத்தல்கோலில் நிறுத்தப்பட்டு, முடிவெடுக்கப்படும்.

என்னைஎன் வீட்டு தோட்டத்தில் அல்லது பக்கத்தில் உள்ள மண்ணில் சூல்கொள்ளவைக்க முடியுமா?

உன்வீடு உனக்கு இப்போது தெரியாது, எங்களுக்கும் தெரியாது. இங்கே உள்ளதெல்லாம், உயிர் சுமக்கும் தாவரங்கள். மனிதர்கள் அல்ல.

இப்போதெல்லாம்மின்சார மயாணங்கள் வந்து விட்டதே. நானும் அப்படித்தானே முடிந்திருப்பேன். இதில் எங்கே மண், எப்படி நான்விதை?
அதன்பதில் உனக்கே தெரியும். அதனால் தான் என்னுடன் உன்னால்உரையாட முடிகிறது. பலர் விதையாகி, உயிராகி, மண் கொண்டு, மண் தின்று தினசரிவாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் நீ அவர்கள் இல்லை.

புரிந்தது. என்னை கடல் கொண்டிருந்தாலும், ஆறு கொண்டிருந்தாலும், ஏரி கொண்டிருந்தாலும், நீர் மண்ணின்றி அமையாது, இருக்காது. என் துகள், நீரின் வழியே மண் சேர்ந்திருக்கிறது. இன்னொன்றும் புரிகிறது, ஏன் அத்தனை மண்ணுயிர்கள் இருக்கின்றன என்று. மரித்த பின், இப்படியானால், அத்தனை பச்சை உயிர்கள் இல்லாமல் இருந்தால் எப்படி.

நீ இப்போது நீயாகி விட்டாய். உன் கடன் இனி உயிர்த்து கிடப்பதே. உன் அறம் விளைந்து இருப்பதே.

எல்லாம் முடிந்தது. நான் விதையானேன். கேள்விகள் மட்டுப்பட்டன. நானும் பதில்கள் ஆனேன். மண் விரித்து, வெளிவந்தேன். என் உடலை மரமாக்கினேன். மௌனித்து இருந்தேன். அவன் வந்தான். ஆட்கொண்டேன், பின் புத்தன் ஆனான். நான் போதி ஆனேன்.