இவரை பற்றிய படம் ஓடிக்கொண்டிருந்தது. உலகின் அத்தனை பேருக்கும் தன்னை அடையாளம் காட்டி கொண்டவர். கொஞ்ச நேரத்திலேயே, இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமே என்று விக்கிபீடியாவை அணுகினேன்.
அந்த பதிவு, படத்தை விட சுவாரசியமாகவே இருந்தது. புகழை தன் காலடியில் இட்டு அடிபணிய வைத்த ஒரு மனிதனின் வாழ்க்கை ஓட்டம், அவரின் சண்டை முறையை போலவே படு வேகமாகத்தான் இருந்துள்ளது. புகழின் ஒரு புள்ளியை தொட்டவுடன் சரசரவென பல படிகள் பறந்துள்ளார், ஆனால், கீழே அதல பாதாளம் ஒன்று கண்ணுக்கு தெரியாமல் உண்டாவதை அறியாமல்.
அவர் வாழ்ந்த காலத்தில் உச்சத்தில் இருந்த பல குத்து சண்டை வீரர்களை வீழ்த்தியும், 6 முறையே குத்து சண்டை போட்ட ஒரு இளைஞனிடம் தோற்றும், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து சண்டை போட்டு பார்க்கின்சன் நோய் பெற்றும், நாலு மனைவியரை கட்டி மேய்த்தும், பெண்கள் இதற்கெல்லாம் வர கூடாது என்று சொல்லி, தன் மகளை வர விட்டும், வாழ்க்கை சதுரங்கத்தை தன் போக்கில் வாழ்ந்துள்ளார்.
இப்பொழுது 22 மில்லியன் பேருக்கு உணவளித்து அவர்களின் பசியை போக்கி, உலகம் முழுவதும் தன்னால் முடிந்தவற்றை செய்து வரும் இவரை பார்க்கும் போது புகழ் மட்டுமே தேடும் பலர் நியாபகம் வருகிறார்கள்.
முடிந்தால் இவரை நேரில் பார்க்க ஆசை.