பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்த அப்பா முகத்தில் கவலை அவ்வப்போது வந்து சென்றது. இப்பொழுது தான் மாமா மூச்சற்றவராக கொண்டு வரப்பட்டார். அதற்கு முன் வரையிலும், கிட்டத்தட்ட எட்டு வார மருத்துவமனை வாசம். காசநோய், அவரை பாடாய் படுத்தி இருந்தது. என்னன்னவோ வைத்தியம் பார்த்தும் கேட்கவில்லை. கடைசியில், அப்பா தான் தன் தங்கையை இங்கு இருக்கும் காசநோய்க்கென இருக்கும் பிரத்தியேக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று கூட்டி வந்தார். வந்த நேரமோ என்னமோ, மாமாவுக்கு ஒன்றும் சரிபட்டுவரவில்லை. மருத்துவமனையிலேயே வாசம். அத்தை மட்டும், பாதி நேரம் இங்கே, பாதி நேரம் அங்கே என குதிரையாக ஓடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அன்பு இழந்து, கோபமே மீதி இருந்தது. அவளுக்கென்று ஒரு குரல், அண்ணன் மகனென்றால், கூட ஒரு இன்ச் புன்னகை பெருக்கும். ஆயிரம் தான் தகராறுகள் இருந்தாலும், அன்பாக பேசும் குரலை எப்போதும் உள்ளுக்குள் தேக்கி வைத்துக்கொண்டு தான் இருந்தாள்.
இப்படி ஆகி இருக்க வேண்டாம் தான். அவஸ்தையிலும் அவஸ்தை. இந்த வீட்டிற்கு வாடகை வந்து, இரண்டு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒரு சாவு. இந்த கதை சொல்பவனுக்கும் அந்த வயதில் இதெல்லாம் புதிது. மாமா உடல் வரும்போதே, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியுடன், நெற்றியில் ஈரம் காயாத விபூதி. செத்தபின் செய்யவேண்டிய காரியமெல்லாம் எப்படி நொடிப்பொழுதில் அரங்கேறுகிறது என்பதெல்லாம் ஆச்சரியம். சேராத கைகள் சேரும், கூடாத நட்பு கூடும், பார்க்காத கண்கள் பார்த்துக்கொள்ளும். இத்தனைக்கும் நடுவில், சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவைக்க அத்தனை சாங்கியங்கள். மூச்சு முட்டும்.
அத்தைக்கும் சரி, அப்பாவுக்கும் சரி, முகத்தில் ஒரே ஒரு கவலை. எப்படி சமாளிப்பது என்று. இன்னும் சொல்லிவிட்டவர்கள் வர நேரமாகும். காசநோய் பாதித்த உடம்பு என்பதால், நிறைய நேரம் வைத்திருப்பது சரியில்ல. எண்பதுகளின் மத்தியில், ஒரு நடுத்தர குடும்பத்தில், குளிர்பதன பேட்டி என்பது, எம்ஜிஆருக்கு மட்டுமே உரித்தானது. மற்றவர்கள் எல்லோரும், சுதந்திரமாக மூச்சு விட்டு சாகலாம். மாமாவின் முகம் மூடப்பட்டிருந்தது. கண்களுக்கு கீழ் மேல்கன்னம் வரை மட்டுமே பார்க்க முடிந்தது. அதற்கு பின் வெள்ளைத்துணியில் மூடியிருந்தது.
அண்ணா, எப்படி சமாளிக்கிறது?
பாத்துக்கலாம்மா..
எப்படி?
என்ன சொல்றதுன்னு யோசி. நானும் யோசிக்கறேன். அதுக்குள்ள, பாடை செய்ய சொல்லிவிட்டிருந்தேன் இல்லையா, அத என்னன்னு பாத்துட்டு வந்துடறேன்.
அப்பா இப்போதைக்கு சில மணி நேரங்களை கடன் வாங்கி வெளியே சென்றார். ஆனால், அவருக்கும் அந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம். இன்னும் சில மணி நேரங்களில் இந்த குட்டி அறையும், நான்கு நான்கு பேராகவே நிற்க முடிந்த தாழ்வாரமும் நிரம்ப போகிறது.
சில மணி நேரமெல்லாம் எடுக்க அவகாசம் கொடுக்காமல், சல்லிசான விலைக்கே மாமாவின் கடைசி வண்டி செய்துவிடப்பட்டு இருந்தது. பூக்கள் மட்டும் தான் வாங்கி கொடுக்க வேண்டும். அதையும், அப்பாவின் நண்பர் பார்த்துக்கொண்டார். எல்லாம் சேர்ந்து, அவருக்கு சொன்ன ஒரே விஷயம், அந்த கேள்விக்கு பதில் என்ன. யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.
அம்மா எதிர்பட்டாள்.
உங்க தங்கச்சிக்கு ஏதாச்சும் பதில் சொல்லுங்க. நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரே பதில் சொன்னாத்தான் சரியா இருக்கும். நீங்க எதுவும் சொல்ல மாட்டேன்கிறீங்க. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு.
என்ன செய்யணும்னு எனக்கும் தெரியல. கொடுத்த காசுக்கு அவனுங்க சரியா வேலை செஞ்சிருந்தா, இப்போ இந்த நிலைமை இல்ல. எல்லாத்துலயும் எல்லாருக்கும் ஒரு அலட்சியம். அந்த அலட்சியம், இப்போ நம்மள அலைக்கழிக்குது.
சரி, அவங்ககிட்டயே என்ன பண்ணலாம்னு கேட்டிங்களா?
கேட்டேன். அப்படியே நமக்கு உதவரா மாதிரியே பேசிட போறாங்க… தெரிஞ்ச விஷயம் தானே… எங்களால ஒன்னும் பண்ண முடியாது. நீங்க பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க… இவ்ளோ படிச்சும், கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா சரி..
இப்படியே பேசிகிட்டு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது…
சரி, நடந்தத அப்படியே சொல்லிடலாம்..
அண்ணா, அது எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல…
எப்படி வேணா எடுத்துக்கட்டும்மா. இது தானே நிஜம். வரவங்களும் தெரிஞ்சிக்கட்டும்.
சரி, எப்படியோ ஒன்னு. என்னோட புருஷன் இறந்ததை நெனச்சு அழறதா, இப்படி ஒரு நிலைமையை நமக்கு ஆண்டவன் குடுத்துட்டானேன்னு அழறதா, ஒன்னும் புரியல.
இப்போதைக்கு எல்லாத்தையும் விட்டு தள்ளும்மா.. நமக்கு நிறைய வேலை இருக்கு.. நீ யோசிக்க வேண்டியதெல்லாம், இதுக்கப்புறம் நீ வாழ போற வாழ்க்கை.. அது தான் இப்போதைக்கு தேவை. மச்சானை நல்லபடியா அனுப்பிவைப்போம்.
சரிண்ணா..
இப்படியெல்லாம் பேசிவிட்டாலும், அவருக்கு உள்ளுக்குள் அவஸ்தை அடங்கவில்லை. அந்த முதல் கேள்வியை எதிர்கொள்வதற்கு தான் தைரியம் தேவை. அதற்கு பின் ஒன்றும் இல்லை. அது திரும்ப திரும்ப சொல்லப்படும். அதற்கு பின் பிறருக்கே அது அவல் ஆகிப்போகும். தான் தன்னுடைய வேலையை பார்த்துக்கொள்ளலாம்.
முதலில் வந்து இறங்கியது, இரண்டாவது இளைய அத்தை.
அக்காவை கட்டிக்கொண்டு அழுகிறாள். அழுது தீர்க்கிறாள். ஆசுவாசமாகிறாள்.
அப்பாவிடம் வந்து,
என்னண்ணா, ஏன் முகத்தை இப்படி மூடி வெச்சிருக்கீங்க. வர்றவங்க எல்லாம் பாக்கபோறதே முகத்தை தானே. அதை ஏன் மறைச்சு வெறும் கண்ணும் மட்டும் தெரியற மாதிரி வெச்சிருக்கீங்க.
மச்சானோட மூக்கை ஆஸ்பத்திரியிலேயே, நாம போய் எடுக்குறதுக்குள்ளயே, எலி சாப்பிட்டுச்சும்மா… படுபாவி டாக்டருங்க, உங்க அக்கா வந்து போன அந்த ஆறு மணி நேரத்துக்குள்ள, அவர் இறந்து, மார்ச்சுவரியில வெச்சு, அங்க இந்த அநியாமெல்லாம் நடந்து, ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க…
அப்பாவுக்கு இப்பொழுது தான் அப்பப்பா என்று இருந்தது.
எலி வேறு வேலை பார்க்க சென்று கொண்டிருந்தது.