அந்த ஒரு மணி நேரம் மட்டும் கடிகாரத்தை என் மகன் மாற்றாமல் இருந்திருந்தால், வாழ்க்கை எவ்வளவு அழகாக இருந்திருக்கும். இப்போது அந்த ஒரு மணி நேர இழப்பு அல்லது தவறு என்னை அலைக்கழிக்கிறது. அவனும் இப்போது என் தோளில் தான் பயணம் செய்கிறான். என் பாவகணக்கை அவனும் எண்ணிக்கொண்டிருக்கிறான்.
அன்றொரு நாள், என் மனைவி வழமையாக செய்யும் காலை வேலைகளை செய்து முடித்திருந்தாள். எப்போதும் என்னை எழுப்பிவிட்டு போகும் பழக்கம் அவளுக்கு இல்லை. எழுப்பினால் என்ன ஆகும் என அவளுக்கு நன்றாகவே தெரியும். உலகையே உலுக்கிவிட தைரியம் இல்லாவிட்டாலும், அவளை தேவை இல்லாமல் திட்டி, உருட்டி மிரட்டி, தொலைந்த தூக்கத்தை மீண்டும் தேடிக்கொண்டிருப்பேன். அதுவும் வருவேனா என அடம் பிடிக்கும். திரும்ப நான் வர இன்னொரு பன்னிரண்டு மணி நேரம் காத்திரு என தகவல் தெரிவிக்கும். கண்களுக்கு கீழே தான் உட்கார்ந்திருக்கும். உள்ளே நுழைய மாட்டேன் என்று தேவுடு காக்கும். இத்தனைக்கும் காரணமான அவளை என உருமினாலும், நன்றாகவே தெரியும், அவள் காரணமில்லாமல் என்னை எழுப்ப மாட்டாள் என்று. ஆனால், இந்த விவஸ்தை கேட்ட தூக்கம், அதுவும் தடைபட்ட தூக்கம், குழைத்து கட்டப்பட்ட காதல் கோட்டைகளை என்றும் மதித்ததில்லை.
அவளுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அது இருக்கிறது என்று. மகனுக்கு தெரியாது. அவனுக்கு அப்போது ஆறு வயது தான் ஆனது. அவனுக்கு மிகவும் பிடித்த நடிகர் அப்போதைக்கு ராமராஜன் தான். கரகாட்டக்காரன் பாட்டு வந்துவிட்டால் போதும், பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு திங்குதிங்கு என்று ஆடுவான். இளையராஜா கொஞ்சம் கனிவு காட்டி இருக்கலாம். அந்த மனிதனின் இசைக்கு நாங்கள் அனைவருமே அப்போது அடிமை. ஆனால் இவனுக்கோ ராமராஜன் தான் ஆதர்சம். அவர் திரையில், ஒலியும் ஒளியுமில் வரும் போது தான் இரண்டு மடங்கு சோறு அவன் வயிற்றுக்குள் தஞ்சம் அடைந்திருக்கும்.
இளையராஜா எனக்கு பிடிக்க ஆயிரம் காரணம் இருந்தது. உங்களுக்கும் இருக்கும். எனக்கு இருக்கும் காரணம் உங்களுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. என் தூக்கம் தான் காரணம். அப்போது என் நண்பர்களெல்லாம் சொல்வார்கள், எனக்கு தூக்க துணை ராஜா என்று. சமயத்தில் துக்கத்தின் துணையாகவும் மாறிப்போனார். எனக்கோ தூக்கம் இல்லாதபோது அவர் துணை. என் பிரச்சினையே இது தான். கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள். இந்த மாதிரி ஒன்றை நீங்கள் எப்போதோ ஒரு நாள் தான் கேள்விப்படுவீர்கள். ஆனால், கேட்ட பொழுதில் அது உங்கள் மனதில் நன்றாகவே இருந்துவிடும். நகலாது. அடுக்கி வைத்த பளிங்கு மாளிகையின் முன் ஒருவன் வேப்பங்குச்சியில் பல் விளக்கி அந்த பளிங்கின் மீதே துப்பினால், அந்த காட்சியை நீங்கள் முதல் முறை பார்த்தால், பளிங்கு மாளிகையா உங்கள் மனதில் நிற்கும்? அந்த துப்பும் துப்பாய காட்சி தானே நினைவில் இருக்கும். ஒழுங்கீனமற்ற ஒவ்வொன்றும் நம் மனதில் நன்றாகவே இடம் பெரும். அப்படி ஒன்று தான் இது.
எனக்கு நகர்ந்து கொண்டே இருக்கும் துயில் வியாதி. உங்களுக்கு எல்லாம் – எனக்கு இருக்கும் இந்த ஒன்று உங்களுக்கு இல்லை என்று எடுத்துக்கொள்கிறேன் – சரியான நேரத்திற்கு தூக்கம் வரும், சரியான நேரத்தில் முழிப்பும் வரும். எனக்கு அந்த சரியான நேரம் நகரும். ஒவ்வொரு நாளும் நகரும். ஒரு நாள் ஒன்பது மணியில் இருந்து காலை ஏழு மணி வரை என்றால், அடுத்த நாள் அது நகரும். அடுத்த நாள் பத்து மணி வரை தூக்கம் வராது. அதற்கு பின் வரும். காலை எட்டு மணிக்கு விழிப்பேன். இதிலென்ன அட்டகாசம், எல்லோரும் அப்படித்தானே என சொல்லாதீர்கள். எப்படியாக இருந்தாலும், தூக்கம் இரவிற்குள் வந்துவிடும், விழிப்பது காலைக்குள் வந்துவிடும். நான் சுழலும் வட்டத்தில் இருப்பதால், அந்த வட்டம் சில நாட்களில், காலை பத்து மணிக்கு தொடங்கும். சாயங்காலம் ஏழு மணிக்கு விழித்துவிடுவேன். சுழன்று கொண்டே இருப்பதால் என் வேலை எல்லாம் சுழலுமா என்ன? வட்ட வடிவில் வேலை எல்லாம் செய்ய முடியாது. வேலையே கிடைக்கவில்லை. எந்த மருத்துவருக்கும் எனக்கு மருந்து கொடுக்கும் அறிவு இருப்பதாக தெரியவில்லை. இங்கு தான் இளையராஜா வந்து விளையாடினார். நான் என் வியாதியை புரிந்து கொண்ட போது என் வயது கிட்டத்தட்ட பன்னிரெண்டு இருக்கும். அது வரை பள்ளியில் தூங்கி தூங்கி விழுவேன். வாத்தியார்கள் அடி வெளுத்து விடுவார்கள்.
அடியும் இடியும் தாங்கி வருவதென்ன சரியான படிப்பா? அத்தனைக்கும் தோல்வி தான் எனக்கு துணை. தூக்கம் சரியாக வந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும். நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் எனக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள். சில நாட்களில் கும்மிருட்டு நேரங்களில் கில்லி விளையாட வாருங்கள் என அழைக்கவா முடியும்? ராஜா மட்டும் தான் அழைத்த நேரத்தில் வருவார். அத்தனை கேஸட்டுகளில் எனக்காக இசையை வரித்து வைத்திருந்தார்.
அவரின் துணையிலேயே தான் என் துணையும் கிடைத்தாள். அவளுக்கும் அவர் தான் பைத்தியம். இதில் அவர் பைத்தியம் என அர்த்தம் வந்தால் நான் பொறுப்பாக முடியாது. மகனும் பிறந்தான். வேலை இல்லாமலே தான் இருந்தேன். அவளுக்கு தான் சிரமம். ஓடிக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது பக்கத்து வெல்டிங் கடையில் கூப்பிடுவார்கள். அப்போது மட்டும் கைக்கு ஒரு ஐநூறு ரூபாய் கிடைக்கும்.
மகனுக்கு ஆறு வயது ஆனது. எனக்கு அப்போது வெல்டிங் கடையில் அறிமுகமான ஒருவர் என் அருகாமையை ரசித்தார். அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் கூட்டம். அவர்களில் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்துகிறேன் என கூறி இருந்தார். அறிமுகமும் செய்தார். ஒரு வேலையும் கிடைத்தது. அவர்களுக்கு என் தூக்கமின்மை பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது.