எப்படி பார்த்தாலும் அவனுக்கு ரெட்டை நாடி தான். நடக்கும் போது அப்படி மூச்சு வாங்கும். கணிப்பொறியில் ப்ரோக்ராம் அடிக்கும் போது மட்டும் அந்த மூச்சு மட்டுப்படும். தியான நிலைக்கு செல்வான். ஒவ்வொரு படி நிலையாக மாறிக்கொண்டே இருப்பான். அவன் பெயர் சரவணன் என வைத்துக்கொள்ளலாம்.
சரவணனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பத்து கணினி ப்ரோக்ராம் டீபக் செய்யாவிட்டால் அன்று இரவு கனவில் பாட்டி வந்து வடை சுட்டு, புகை பறக்கும் வடையை அவன் கன்னத்தில் அழுந்த தேய்த்து விடும் ராட்சத கனவுகள் வந்துவிடும். அவனுக்கு பாட்டியிடம் அன்பு நிறைய தான் கிடைத்திருக்கிறது. ஆனால் அவள் இறக்கும் முன் அவனுக்கு நிறைய புத்தி சொல்லி இருந்தாள். “இந்த பொட்டிய கட்டிக்கிட்டு எத்தனை புள்ள பெத்துக்க போற? பொறந்தாலும் அது உன்ன வெச்சு காப்பாத்தாது. உன் முளைக்குள்ள உக்காந்து கொஞ்சம் கொஞ்சமா கடிச்சு புத்தி கெட்டவனா தான் மாத்தி விடும்”, என்பாள். சரவணனுக்கு எதுவுமே உரைக்காது. பாக்ஸ்ப்ரோ என்ற நிரலில் ஆரம்பித்த அவனின் வாழ்க்கை இப்போது வந்து நிற்பது தொலைபேசியின் பின் இருக்கும் கட்டமைப்பில் ஒரு முக்கிய இடம்.
எப்படி இங்கு வந்து சேர்ந்தான் என யோசித்தால் கொஞ்சம் கலங்கலாகத்தான் நினைவில் நிற்கிறது. அவனின் மேலாளர் ஒரு முறை சொன்னார், “நீயெல்லாம் கோட் எழுத வந்தியா இல்ல, காலையில சாப்பிட்ட இட்லியை கீ போர்டு மேல தினம் தினம் வாந்தி எடுக்க வந்தியா” என வண்டி வண்டியாக கேட்டு வைத்தார். அதன் முன்னரும் பின்னரும் சிறிது அவ-பாராளுமன்ற வார்த்தைகளையும் போட்டு வைத்தார். அவமானம் பிய்த்து தின்றது. தனி அறையில் திட்டினால், அடுத்த நாளும் அந்த வாந்தியை எடுப்பதில் அவனுக்கு பெரிய பிரச்சினை இருந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை. சொன்ன சூழலும், அவன் இருந்த நிலையும் தான் காரணம். கணக்கு போட்டு பார்த்தால் அன்று ஜெயித்தது என்னமோ அந்த மேலாளர் தான். அந்த சம்பவம் நடந்த போது தளத்தில் இருந்த சில குட்டி குளுவான்கள் அவரின் அல்லக்கை ஆனார்கள். அதற்கு பின் அவருக்கு மிக்ஸர் என்ன, ஜூஸ் என்ன, வார இறுதி ஆனால் பார்ட்டி என்ன என அவர்கள் ஒரு குடும்பமானார்கள். அதற்கு பின் அலுவலகம் குடும்பமானது, குடும்பம் அலுவலகமானது. அதெல்லாம் அவர்களின் ராமாயணம். அது எதற்கு.
அன்று இரவு சரவணன் சரியான குடி. தேடித்தேடி குடித்தான். அந்த மேலாளர் சொல்லி வைத்த வாந்தி வேறு வந்து தொலைத்தது. எங்கு பார்த்தாலும் அவனே வந்து தொலைத்தான். மேலாளர் என்றால் மேலேயே வந்து உட்கார்ந்திருக்கும் மனித இனம் என்று எந்த தஸ்தாவேஜுகளிலும் சொல்லவில்லை. அப்போது தான் முடிவெடுத்தான். இனிமேல் கூட்டத்தில் கும்மாளமடித்து பத்து வரிகள் எழுதி, அதற்கு நாற்பது பக்க டாக்குமென்டுகள் எழுதி, அதை ஒரு டெஸ்டிங் டீம் வந்து மானபங்கப்படுத்தி, பத்து வரியை பத்தாயிரம் வரிகளாக்கி விடும். பத்து வரியிலேயே அது சரியாக வேலை செய்திருக்கும். பத்தாயிரம் வரிகளில் அது பக்கத்து வீட்டில் போய் பத்து பாத்திரம் தேய்த்து விடும் அளவுக்கு சுமாரான ப்ரோகிராமாகி இருந்தது. ஆனால், அதுவே அவர்களுக்கு அளப்பரிய வெற்றி. அதை ஒரு நட்சத்திர விடுதியில் கொண்டாடுவார்கள். பத்து வரி அங்கு அனாதையாகி இவன் மூளைக்குள் மட்டும் உட்கார்ந்திருக்கும். என்னை நீ வேறு எங்காவது போய் சுவீகாரம் கொடுத்துவிடு, இவர்களுக்கு தேவை இல்லை என்று சொல்லும்.
இது எதுவுமே வேண்டாமென தேடிக்கொண்டு இருக்கும்போது தான் அந்த வேலைவாய்ப்பு அவனை ஈர்த்தது. பெங்களூரில் இருக்கும் ஒரு சுமாரான, பெயர் தெரியாத அலுவலகத்திற்கு, குறைவான சம்பளத்தில், ஆனால் உலகத்தர டெக்னாலஜியில் வேலை செய்யலாம் என விளம்பரப்படுத்தி இருந்தார்கள். மேலே உட்கார்ந்திருந்த மேலாளரை கீழிறங்கும் பொருட்டு, வேலைக்கு விண்ணப்பித்தான். ஒரு வாரத்தில் நேர்முக தேர்வு நடைப்பெற்றது. நேர்காணலில் சரவணனை கேள்வி கேட்டவரையும் சேர்த்து அந்த அலுவலகத்தில் இருவது பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடம். ஐடி பார்க் எல்லாம் இவர்களின் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஆனால், அங்கிருந்த இருவது பெரும் சிரித்து சிரித்து வேலை பார்ப்பது மனதிற்கு இதமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேலாளர் கீழாளர் ஆனார்.
ஒரு நல்ல முகூர்த்த நாளில் தாலி கட்டிக்கொண்டு வேலைக்கு சேர்ந்தான். சரவ், சரவ் என்ற பெயர் இடப்பட்டது. இவனுக்கு அது சரஸ், சரஸ் என்ற தொனியிலேயே கேட்டது. என்ன எப்படி இருந்தால் என்ன, மேல், கீழ் குழப்பம் தீர்ந்து இப்போது ஒரு புதிய தெளிவுடன் இருந்தான். புதியதாக கற்க நேர்ந்தது. அனைத்தும் தொலைபேசிகளை பற்றியும், அது இயங்கும் முறைகள் பற்றியும் தான் வேலை அனைத்தும். அனைத்து தொலைபேசியிலும் மேற்பரப்பு இன்னும் செங்கல் தான். வெளிப்பூச்சு கொஞ்சம் பார்க்க ஆடம்பர சீமாட்டி போலத்தான் இருக்கும். ஆனால், அதன் இதயம் தான் அதற்கு சூர்யா போல. இதுவரை நன்றாக சென்றிருக்கும் போக்கில் சூர்யா எங்கிருந்து வந்தார் என தோன்றலாம். அங்கு ஒரே சினிமா வாடை அடிக்கும். எப்போது பார்த்தாலும் சினிமா பற்றிய பேச்சு இல்லாத நாளே இல்லை. அங்கு ஜோஸ் என்ற ஒரு அலுவலக நண்பர், ரஜினி பற்றி பேசிக்கொண்டு இருந்தார். “உனக்கு தெரியுமா சரவணா, ரஜினிக்கு மட்டும் தான் எந்த டிரஸ் போட்டாலும் டிப்டாப்பா செட் ஆவும். மத்தவனுக்கு எல்லாம் சர்க்கஸ் கூடாரம் மாதிரி செட் ஆன மாதிரியும் இருக்கும், செட் ஆவாத மாதிரியும் இருக்கும்” என்பார். அவர் அடிக்கடி தேவா, சூர்யா பற்றி பேசிக்கொண்டே இருப்பார். அது தான் அந்த சூர்யா. தொலைபேசியின் மேற்பரப்பு தேவா என்றால், சூர்யா அதன் இதயம். அதனால் தான் அது ஹிட் ஆகுது என்பார். திக் திக் என்று நண்பர்கள் ஆனார்கள்.
ஒரு நாள் இரவு ஜோஸுக்கும், சரவணனுக்கு ஒரே வார்த்தை தகராறு. அவருக்கு அமெரிக்க நண்பர்கள் அதிகம். அங்கிருந்து ஒரு நண்பர் முக்கியமான ஒரு ப்ராஜக்ட் இருப்பதாகவும் அது கொஞ்சம் முறைதவறியதாக இருப்பதாகவும், ஆனால் அதை செய்வது என முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். தேவை இல்லாத வேலை எல்லாம் செய்ய வேண்டாம் என்றும், அது சரியாக போய் முடிவடையாது என்றும் தலையில் அடித்து சொல்லிப்பார்த்தான். ஆனாலும் கேட்கவில்லை. நாம போற வழி தப்பா இருந்தாலும், போய் சேருற இடம் கோவிலா இருக்கணும் என்றார்.
அடுத்த இரண்டு மாதங்கள் ஜோஸ் முகத்தில் களை குறைந்தது. எடை குறைந்து மிகவும் வறிந்து காணப்பட்டார். இவனுக்கு கேட்க விருப்பமில்லை. ஆனாலும், வருத்தமாக இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு வேலை. அதிலும் ஒன்று நிலை தவறிய ஒன்று. அதற்கு இப்படி உடலையும், மனதையும் கொடுக்க வேண்டுமா என்று வருந்தினான். ஒரு நாள் இரவு அவரின் வீட்டுக்கு சென்று அப்படி என்னதான் செய்கிறார், மனது இடம் கொடுக்கவில்லை என்றாலும், கொஞ்சம் ஒத்தாசை செய்துவிட்டு வரலாம் என்று சென்றான். சரவணன் சென்றதில் ஜோஸுக்கு மிகவும் மகிழ்ச்சி. குறைந்த களை, மீண்டும் வளரலாம் என யோசித்தது. மூளையில் பிறப்பது தானே களை. இதயத்தில் இருந்து பிறந்தது தானே மூளை.
ஜோஸ் விவரித்தார். சரவணனுக்கு பழக்கப்பட்ட நிரல்கள் தான். கண்ணை மூடி ரூபிக்ஸ் கியூபை முப்பது நொடிகளில் முடிக்கும் பக்குவம் அவனிடம் இருக்கிறது. அது நிரல்களிலும் நடக்கும். உட்கார்ந்தால் டெலிவரி பார்க்காமல் விடமாட்டான். சிசேரியன் செய்யும் பழக்கம் இல்லை, சுகப்பிரவசம் தான். உட்கார்ந்தான்.
ஜோஸ், நீங்க போய் கொஞ்சம் வெளிய ஆக்சிஜன் இருக்கான்னு பாத்துட்டு வாங்க. இருந்தா கொஞ்சம் அது கூட பேசிகிட்டு இருங்க.. நான் கொஞ்சம் இத ஒரு கை பாத்துட்டு வரேன்.
அதெல்லாம் இருக்குது. நீ கைய வெச்சிக்கிட்டு நல்லா இருக்குற ப்ரோகிராம, சரி செய்யறேன்னு, அது என்ன செய்யணுமோ அத மாத்தி விட்டுடாத…
இது என்ன பெரிய வால்மீகி சூத்திரமா? பாத்தாலே தெரியுது, போன் பேசும்போது பேசுறவன் வாய்ச டெக்ஸ்ட்டா மாத்திக்கிட்டு இருக்கீங்க. இதுல என்ன இருக்கு. நாம செய்யுறது தானே. இப்போ இருக்குற லைப்ரரியில எல்லாத்துலயும் இத செய்யுறதுக்கு வழி இருக்கு. நீங்க என்னடான்னா ஊர் பேர் தெரியாத ஒரு லைப்ரரிய வெச்சிக்கிட்டு தடவிகிட்டு இருக்கீங்க.
அது ஊர் பேர் தெரியாதது தான். ஆனா, அது அப்படித்தான் இருக்கணும்.
ஏன்?
தெரிஞ்சா, பிடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
இது என்ன, டீப் வெப்’ல இருந்து வர அயிட்டமா?
ஆமா. அதானே பாத்தேன். இங்க தான் அந்த மேட்டர் உக்காந்திருக்குதா. அது சரி, ஆனா, கோட் எல்லாம் பாத்தா இது நம்ம ரெகுலரா யூஸ் செய்யற மாதிரியாவே இருக்கே. அதே போல பன்க்ஷன்ஸ், நியூரல் நெட்ஒர்க்.
நம்ம மேட்டர் உக்காந்திருக்குற கோட் தனியா பிரைவேட் க்ளவுட்ல இருக்கு. அத எனக்கே பாக்க பெர்மிஷன் இல்ல.
அது என்ன செய்யும்?
மியூட் பட்டன ஒன்னும் இல்லாம செய்யுறது தான் அதோட வேலை.
எமகாதகனுங்கய்யா நீங்க…
நான் இல்ல, ஆனா அந்த கோட் எழுதியவன் தான். அது மட்டும் வெளிய தெரிஞ்சதோ, அத மொதல்ல பிக்ஸ் பண்ணிடுவாங்க… அதுக்கப்புறம், எழுதினவனையும், கூடவே அத பிரதி எடுத்த என்னோட அமெரிக்கா தோஸ்த்தையும், என்னையும் எண்ணெய் சட்டியில போட்டு போரட்டி எடுத்துடுவாங்க.
சரி, இப்போ என்ன நிலைமையில இருக்கு?
அல்மோஸ்ட் முடிஞ்சு போச்சு…இப்போ டெஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.
இதுக்கு பேரு டெஸ்ட் இல்ல. இன்னொருத்தன் வேட்டியில் இருந்த ஓணானை, உன்னோட வேட்டியில் விட்டா என்னாகும், அவனோட வெட்டியில விட்டா என்னாகும்ன்ற கதை தான். டெஸ்ட்’னு வேற ரொம்ப டிசன்ட்டா சொல்றீங்க. சரி, இப்போ அத டெஸ்ட் செய்ய முடியுமா?
முடியும்.
எனக்கு ஒரு நம்பர் இருக்கு. அதுல செய்யலாம்..
சரி, நான் வெளிய போயிட்டு வரேன். நீ, ரொம்ப நோண்டாம, சீக்கிரம் மூடி வை.
சரவணனுக்கு கால் பரபரப்பரத்தது. இரவு நேரம் வேறு ஆதலால் யார் இந்த நேரத்தில் முழித்திருக்க போகிறார்கள். அமெரிக்க நண்பர்கள் தான் இந்நேரம் மாங்கு மாங்கு என்று உழைப்பார்கள். அவனின் நண்பர்களிடம் பேசலாம், அதில் மியூட் டெஸ்ட் செய்யலாம் என யோசித்தான்.
மணி அடித்தது. மறுமுனையில் தொலைபேசி எடுக்கப்பட்டது.
சரவணா… சரவ் என்கிற சரவணா, எப்படி இருக்க?
நல்லா இருக்கேன்டா.. பல வருஷத்துக்கு அப்புறமா பேசுறோமா?
இல்லையே, ஆறு மாசம் முன்னாடி பேசினோமே!
அட, ஆமா. சரி தான்.
குசல விசாரிப்புகள் எல்லாம் முடிந்தது. இப்போது மியூட் நிலைக்கு அவனை கொண்டு வர வேண்டும். சரி, இவனே ஒரு நிமிடம் அப்படியே லைனில் இருக்கிறேன், ஒரு நிமிடம் என்று சொன்னால், அவன் மியூட்டில் இருப்பான் என்ற யுகத்தில் சொன்னான்.
“சரி, நான் லைன்லேயே இருக்கேன்.” மியூட் போடப்பட்டது.
நிரல் ஓட ஆரம்பித்தது. இருட்டில் அமர்ந்திருந்த அந்த நிரல் அமெரிக்க நண்பரின் தொலைபேசியில் சிம்மாசனம் போட ஆரம்பித்தது.
படாரென ஒரு சத்தம். அமெரிக்க நண்பன் உளற ஆரம்பித்தானா இல்லை திட்ட ஆரம்பித்தானா என தெரியவில்லை. புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு குரல். மியூட் போட்டுவிட்டு என்னமோ செய்து கொண்டிருக்கிறான். கொஞ்ச நேரத்தில் ஒரு விசும்பல் கேட்டது. குழந்தையின் விசும்பல். குழந்தை பேச ஆரம்பித்தது.
“அப்பா, நான் எனக்கு தெரியலைன்னு தானே உன் கிட்ட கேட்டேன்”
“எந்த நேரமும் என் கிட்டயே கேட்டுகிட்டு இருந்தா நீ எப்போ தெரிஞ்சிப்ப. போ, என் பக்கத்துலயே நிக்காத, போய்த்தொலை.”
குழந்தை விசும்பல் அதிகரித்தது. இவனும் கத்த ஆரம்பித்தான். பின்னாலேயே இன்னொரு குரலும் சேர்ந்து கொண்டது. குழந்தைக்கு யார் அவளுக்காக பேசுகிறார்கள், யார் அவளுக்காக பேசவில்லை என தெரியவில்லை. ஆனால், அம்மா, அப்பா இரண்டு பேரும் கத்திய கத்தில், அவளின் விசும்பல் அடங்கிப்போனது. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு நண்பனின் முகமும், அவனின் அணுக்கமும், பழைய கால சம்பவங்களும் நினைவுக்கு வந்தன. சுற்றி என்ன நடந்தாலும், சூழலே கடுமையாகிப்போனாலும் எவரிடமும் முகம் காட்ட மாட்டான்.
இதற்கு மேலும் அவனுக்கு பொறுமை இல்லை. எக்கேடோ கெட்டு போகட்டும் என விட்டுவிட்டான். நிரலில் அந்த நம்பரின் மியூட் வசதியை மறுபடியும் திரும்ப கொடுத்துவிட்டான். பேசுகிறார்கள்.
தொலைபேசிக்கான வாஞ்சை திரும்ப வந்துவிட்டது. ஆள் மாறாட்டத்தில் மறுபடியும் குதித்தான். நண்பனிடம் நண்பனான்.
“என்ன சரவணா, குழந்தைங்க எப்படி இருக்காங்க! என்ன படிக்கிறாங்க! என்ன படம் பாத்த”
குழந்தையின் விசும்பல் குறைந்து, அவள் பாடம் படிக்க போய்விட்டாள் என நினைக்கிறேன்.
அருமையான கதை லக்ஷ்மன். மிகவும் ரசித்தேன். எப்படி ம்யூட் இருப்பதனால் இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம் என்று காட்டி இருந்தீர்கள். பத்து வரி – பத்தாயிரம் வரி, நல்ல நகைச்சுவை. மேலாளர், போன், தேவா-சூர்யா, சாப்ட்வேர் டெலிவரி போன்ற வர்ணனைகள் அபாரம். சாப்ட்வேர் ப்ரோக்ராம்மர்களின் வாழ்க்கையை அழகாக வர்ணித்து இருந்தீர்கள்.