தனி ஒருவனுக்கு வேலை இல்லையெனில்…

டாஸ்மாக் பாரை அழித்திடுவோம் 🙂

மெஸன்ஞரில் எப்போதும் எட்டி பார்க்காத நண்பன் அன்று ‘என்னப்பா தம்பி, நல்லா இருக்கியா?’. Message எட்டி பார்த்தது.

இவன் – சொல்வதற்கு பெரிதாய் இல்லாத, கல்லூரியில் லூட்டி அடித்தும், கொஞ்சம் படித்தும் பொழுதை ஒன்றாக சுற்றிய நண்பன்.

கல்லூரி விட்டு வெளியேறிய பொழுது, நிறைய பேருக்கு, கையில் இரண்டு மூன்று சாய்ஸ் இருந்தது, வேலைக்கு சேர. தறி கெட்டு ஓடவில்லை என்றாலும், மெகா சைஸில் படிக்காததால், நாங்கள் சிலர் கோடம்பாக்கம் சாலைகளிலும், மவுண்ட் ரோடிலும், நுங்கம்பாக்கத்திலும், கோரமங்களாவிலும் resume விநியோகம் செய்து கொண்டிருந்தோம். இவனும் தான். நாட்கள் ஓட, ஒவ்வொருவனுக்கும் வேலை கிடைத்து, Cafe day காபி குடிக்க ஆரம்பித்தாகிவிட்டது. இவனை தவிர்த்து.

3 வருடங்கள் இருக்கும். இப்போது, இவன் யாஹு மெஸஞ்சரில்.

டே, உயிரோட தான் இருக்கியா?
இருக்கேன் தம்பி. இப்போ முழு ஆரோக்கியத்தோட, தெம்பா இருக்கேன்.
இப்போவாச்சும், செல் போன் நம்பர் மாத்தாம வெச்சிருக்கியா?
இப்போ இருக்கு தம்பி. அப்போ நிலம சரியில்ல. வேலை கெடைக்கலயான்னு அவனவன் போன் போட்டு விசாரிச்சு, நமக்கு தலவலிய குடுத்ததால, நம்பர் மாத்திகிட்டே இருந்தேன். நான் இப்போ, TCSல இருக்கேன்பா தம்பி.
கலக்கற மாம்ஸ். சந்தோஷமா இருக்குடா. வெலை எல்லாம் செட் ஆச்சா?
ஆச்சு. ரெண்டு மாசமாச்சுப்பா. ஏதோ, இது வரைக்கும் நல்லா வண்டி ஓடுது.
ரெண்டு மாசமாச்சா? ஏண்டா சொல்லல.
உனக்கே தெரியுமில்ல. ஏற்கெனவே, ரெண்டு கம்பேனில வேல கெடச்சு, அங்க இருந்து வெளியே வந்தது.
சரி விடு, இப்போ, டாடா மடியில உக்காந்திருக்க. ஜமாய்.
ஏதோ உங்க புண்ணியம்பா.
டேய்….
சரி தம்பி, உன்னோட சேலரி என்ன?
(கொஞ்சம் கிர்ரடித்தது. ஏன் இப்படி கேட்கிறான்?)
ஏன்டா, கேட்டு எதாச்சும் கேஸ் போட போறியா?
சொல்லு தம்பி. எனக்கு உன்னோடது, நம்ம பிளே பாய் பரந்தாமனோடது, ஜிம் பாய், நார்த் பசங்க இவுங்களோட சேலரி எல்லாம் தெரிஞ்சா நல்லா இருக்கும்.
நல்லா தானேடா இருக்க?
இருக்கேன் தம்பி. நீ சொல்லு. காரணத்தோட தான் கேக்கறேன்.
சொல்றத கேளு. பணத்த வெச்சு எதுவும் இங்க முடிவாகறதில்ல. Skills வளத்துக்கோ. தானா, நீ எதிர்பாக்கிறது வரும்.
தம்பி, இதெல்லாம் நான் கேக்கல. இருந்தாலும், நீ சொன்னது எல்லாம் சரி தான். அப்படியே ஒத்துக்கறேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.
(ஏதோ காரணத்துடன் கேட்டதால், சொன்னேன்)
சரி இப்போ சொல்லு. ஏன் கேட்ட? இத வச்சிகிட்டு என்ன பண்ண போற?
அடிக்கனும் தம்பி. ஒவ்வொருத்தனயா சொல்லி சொல்லி அடிக்கனும்.
😮 ஏண்டா இந்த கொல வெறி?
உனக்கு தெரியாது தம்பி. 3 வருஷம். காலேஜ் படிச்ச அதே அளவு 3 வருஷம், நான் வேலை தேடினேன். இன்னைக்கு நம்ம காலேஜ்’ல இருந்து வெளிய வர ஒவ்வொருத்தனும், கையில நாலு offer வெச்சிகிட்டு வரான். அவனுக்கு என்ன தெரியும், வெளிய சில பேரு, கம்பேனி வாசல் செக்யூரிட்டி கிட்ட அல்லோலகல்லோல படறான்னு. அந்த மாதிரி சில பேர, இந்த 3 வருஷ பீரியட்ல பேசி, பழகினத பார்த்தா தெரியும்ப்பா. சில விஷயங்கள அப்படி அப்படியே விட்டுட்டு போகனும்னு தான் தோனுது. ஆனா, உன்ன சுத்தி இருக்கிற/நடக்கிறது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உன்ன மாத்திடும். கடைசியில, என்னை கோவபடவெச்சவனும் மனுசன் தான், நானும் மனுசன் தான். சினிமா டயலாக் மாதிரி தான்பா தோனும். ஆனா, கடைசியில அப்படி தான் நடக்குது. இந்த லிஸ்ட்ல நீயும் இருக்கப்பா. பாரபட்சம் பாக்காம, முந்திகிட்டு ஓடனும் தம்பி. இதுல எவன் அவமானபட்டாலும் சரி, என்ன சொன்னாலும் சரி. மோதி பாத்துட வேண்டியது தான்.
ரொம்ப கோவமா இருக்கியேடா. ஒரு சோடா வேணும்னா சாப்பிடறயா? கண்ணா, நீ என்னதான் சொன்னாலும், ஏதோ கேப்டன் படமும் அஜித் படமும் சேத்து பார்த்த effectடா.

அதற்கு பிறகு, கல்லூரியில் படித்த பிடித்த சுரிதார் மலர்களை பற்றி இன்றைய நிலவரத்தை அலசி, காய போட்டு கொண்டிருந்தோம்.

தம்பி, இந்த ஆர்குட் ஆர்குட்டுன்னு சொல்றாங்க இல்ல. அதுல நம்ம பசங்க இருக்காங்களா?
ஓ, பேஷா. பேச்சிலரா, ஆன்சைட்ல இருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் ஆர்குட் தான்டா உயிர் மூச்சு. நம்ம பசங்கள கேக்கனுமா, ஆர்குட் வெந்து பொகயற அளவுக்கு கடலையும் மாங்காயும் போடறானுங்க. நீயுமான்னு கேக்காத? ஊரோட வாழ்ந்து பழகுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கு.
மொதல் வேலையா, என்ன ஆர்குட்ல உன்னோட பிரண்ட்ஸ் லிஸ்ட்ல புடிச்சி போடு. அப்புறம், பேசறேன் பாரு. 3 வருஷத்துல, ஒவ்வொரு நாளும், தெரிஞ்சவங்கள பார்த்தா ஓடி ஒளிஞ்ச கருமம் போதும்.
மாப்ஸ், நீ எதுக்கும் கொஞ்சம் நல்ல டாக்டர பாக்கிறது நல்லதுன்னு நெனைக்கிறேன். ஓவரா எரிமலை மாதிரி வெடிக்காதடா. உடம்புக்கு நல்லதில்ல.
தம்பி, முன்னயே சொன்னது தான். திரும்ப திரும்ப சொன்னாலும், அது மட்டும் தான் நெஜம்.

இன்றைக்கெல்லாம் வேலை கிடைப்பதென்பது, இதயம் திக்கடிக்கிற நிலைமை இல்லை (பெரும்பாலும்). வருமையின் நிறம் சிவப்பு மாதிரி படத்தை இப்போது எடுத்தால், என்னடா காமெடி பண்றாங்க என்று தாராளமாக காமென்ட் வரும். கம்பெனிகள் 10K, 20K, 30K என தலைகளை ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அள்ளி, பெற்றவர்களுக்கு, பயபடாதீங்க என சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் தறி கெட்டு நல்ல திசையிலே சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு இதுவும் ஒரு காரணம். எந்த அளவுகோலிலும் இந்த மாற்றங்கள், கண்டிப்பாக சக்ஸஸ் குறியீடு தான். ஆனால், இந்த நண்பன் போன்ற சிலர், இந்த மாற்றம் பெரிதாக தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாக மக்களை முடிந்தவரை அலைகழிக்கும் என நினைக்கிறார்கள். அதிகம் இல்லையென தோன்றினாலும், தொடர்ந்தால், சொந்த செலவில் சூனியம்.

(Disci: Title maynot be related to the post)