சுதந்திரம்

 அந்த அம்மாளுக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு. சிறிய ஊசியை வைத்துக்கொள்ள அனுமதி இருந்தது. அதன் மூலம் ஒரு சிறிய வலியை அவள் மற்றவர்களுக்கு கடத்திக்கொண்டே இருந்தாள். அவருக்கு மட்டும் எதற்கு இந்த விபரீத வசதி என்று கேட்டுப்பார்த்தாகி விட்டது. ஆனால், இந்த நிறுவனத்தின் டீன் அதற்கு பதில் சொல்லாமலே நகர்ந்து விடுவார். ஆனால், அதற்கான வழிமுறைகளையும், விதிமீறல்களை பற்றி விரிவாக அந்த நிறுவனத்தின் நிறுவனர்களிடம் தெரிவித்து அதற்கான சம்மதத்தையும் வாங்கி விட்டேன் என்று கூறுவார். எப்படி இருந்தாலும், அந்த நடவடிக்கை பலரை முகம் சுளிக்க வைத்தது.

அது ஒரு மனநல காப்பகம். எங்கு சென்றாலும் எனக்கு மனநல காப்பகங்களுக்கு  சென்று வருவது வாடிக்கை. அங்கே தான் மனிதர்கள் இருப்பதாகவும், வெளியே இருப்பவர்கள் திணிக்கப்பட்டவர்கள். திணிக்கப்பட்டு, உப்பிப்போய், என்ன வாழ்க்கை இது என்று எச்சில் துப்பி அந்த எச்சிலிலேயே உட்கார்ந்து சேவகம் செய்பவர்கள் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறுவதுண்டு. இதை எல்லாம் சொல்லும்போது, நண்பன் சொல்லுவான், நீ அங்க இருக்க வேண்டியவன் தான். இங்க தான் நீ மனநிலை பாதிச்சு போய் இருக்க, அங்க போனா சுத்தமா மொழுவிட்டு வந்துடலாம்..

அவளுக்கு என் மேல் தனிப்பிரியம் என்று நினைக்கிறேன். எப்போது போனாலும் வாஞ்சையாக தடவிக்கொடுத்து பேசுவாள். பெரும்பாலும் அவளிடம் நெருங்கிப்பேச நிறைய பேர் வருவதில்லை. அவளின் சக உறைவிட நண்பர்களும் கூட பேசுவதில்லை. ஒரு மூன்று வாரங்களுக்கு பின்பு தான் அதற்கான காரணம் தெரிய வந்தது. அதுவும் அவள் கூறித்தான் தெரிந்தது. காப்பகங்களில் மூன்று வகையான மனிதர்கள் உண்டு. இதில் ஒரு வகையினர் குணமடைந்துவிட்ட, ஆனாலும், திரும்ப அழைத்துச்செல்ல இயலாத அல்லது திரும்ப அழைத்துக்கொள்ளப்படாமல் இருப்பவர்கள்.  அவள் அப்படித்தான். அவளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒருவனும் சீண்டுவதில்லை. விட்ட காலத்தில் கொடுத்த காசும், முறைத்த முறைப்பும் தான் அவர்களின் கடைசிப்பாசம். ஆனால், குறை சொல்ல ஒன்றுமில்லாமல் தான் இருந்தது. அந்த இரு மகன்களுக்கும் அப்படி ஒரு சம்பவ அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த நாள், வழக்கம் போல ஒரு சனிக்கிழமை. அவளின் அறை மட்டும் எப்போதும் மரக்கிளைகள் தொட்டு உரசிக்கொண்டிருக்கும் படி இருந்தது. அங்கு அவர்களுக்கு தனி அறை என்பது ஒரு சின்ன வன்முறை மட்டுமே. சேர்த்து வைத்திருந்தால் கூட சரியாகி இருப்பார்களோ என்னவோ. அந்த அறைக்கு கடைசியாக போய் உட்கார்ந்து பேசிவிட்டு வருவது தான் வாடிக்கை. அன்று அவளின் அறைக்கு செல்வதற்கு மதியம் போல் ஆகி விட்டது. சூடான வெய்யில் மழை போல பேய்ந்து கொண்டிருந்தது. அவள் அறைக்குள், அவளும் அவளின் மதிய உணவும். அந்த உணவு காய்ந்து போக இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது. அவள் மரக்கிளையில் ஒரு புழுவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

வாடா, இன்னைக்கு வர மாட்டேன்னு நெனச்சேன்.

இல்லையே, கண்டிப்பா வருவேன்னு உங்களுக்கு தெரியுமே.

தெரியும், ஆனாலும், சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கு. இல்லைன்னா, எல்லாம் தெளிவாகி இருக்குமே. எல்லாரும் தெளிவாவே இருந்துட்டா எதுக்கு பிரச்சினை வரப்போகுது.

சரி, நீங்க ஏன் சாப்பிடல?

இன்னைக்கு வேண்டாம். பசிக்கல. அது எனக்கு செஞ்சு வெச்சிருந்த சாப்பாடு இல்ல. வேற யாருக்கோ. எனக்கு எப்போ செஞ்சிருக்கோ, அப்போ சாப்பிடறேன்.

உங்க டீன் உங்களுக்காக தனியாவே தானே சமையல் செய்ய சொல்றாரு. அப்புறமென்ன..

அது மட்டும் போதுமா? சாப்பாடு தனியா செஞ்சிட்டா, அது நமக்கானது ஆகிடுமா.

சரி விடுங்க, இப்போ சாப்பிடுங்க. இல்லைன்னா, உங்களுக்கு தூக்கம் வராது. 

வராமயே இருக்கட்டும். ஒன்னும் குத்தமில்ல.

அவளுக்கு புரிந்தே தான் இந்த நடவடிக்கைகள் நடக்கிறது. அவள் இதை வேண்டுமென்றே தான் பதிய வைக்கிறாள். அவளுக்கு இன்றைய இரவு முக்கியம். அந்த விடுதலை முக்கியம். அதற்கு இந்த உணவு பெரும் தடைக்கல். இது எனக்கு புரிந்தே தான் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் அவளை நான் புரிந்து கொண்டது எவ்வளவோ, ஆனால், இந்த விஷயத்தை எனக்கு முதல் ஆறு மாதங்களிலேயே புரிய வைத்துவிட்டாள். மற்றவர்களும் புரிய வைத்துவிட்டார்கள். எப்போது குமுறும் என்று தெரியாத எரிமலைகள் எத்தனையோ உண்டென்பது போல, அவள் எப்போதெல்லாம் தன்னைவிட்டு விலகி இருப்பாள், எப்போதெல்லாம் தன்னுடனே தங்கி இருப்பாள் என்பதெல்லாம் உணவில் தான் ஆரம்பிக்கும். அவள் உணவு உண்ண மறுக்கும் பொழுதெல்லாம், ஒரு பெரிய பாரத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று டீன் சொல்வார். அது ஒரு இரண்டு நாட்களாவது தொடரும். மூன்றாவது நாள், அவளின் மலைகள் வெடிக்கும். அவள் பெண்ணாகவே இருக்க மாட்டாள். எரியும் தீ உடை போட்டுக்கொண்டா இருக்கும். அன்று அவளின் அறை இரண்டு பூட்டுக்கள் போடப்பட்டு, பின் சில மரப்பலகைகள் கொண்டு அடைக்கப்பட்டிருக்கும். தீயின் ஜுவாலைகள் அந்த மரப்பலகைகள் தாண்டி கனன்று கொண்டு வெளி வரும். காதுக்கும் மனதுக்குமான தீ. அவள் உண்ணாத உணவிலிருந்து புறப்பட்டு வரும். தீர்க்காத பசியிலிருந்து வரும். அந்த சொற்களையும், வசவுகளை கூர் தீட்டிய வெளியே அனுப்புவாள். அதை பொறுக்கி எடுத்து, விவாதித்தால் கூட அது சரியாகத்தான் இருக்கும். ஆனால், அதை கேட்கும் பக்குவம் அங்கு யாருக்கும் இருக்காது என்பார் டீன்.

இன்று இரவு அதற்காகத்தான் தயாராகிறாளோ என்று பயம் வந்தது. இது மாதத்திற்கு ஒரு முறை நடப்பது என்றாலும், அதை அனைவரும் கடந்து போய்விட பக்குவம் பெற்றிருந்தாலும், அவளின் உடலையும் நரம்புகளையும் அந்த இரவுகள் பதம் பார்த்திருந்தன. அதை தவிர்த்துவிடவே நினைத்தேன். பல முறை அதில் வெற்றி பெறுவேன். சில முறை பெறுவதில்லை. அந்த தோல்வி தருணங்களில், அவளின் தீ ஜுவாலைகளில் நான் கூட வந்து செல்வேன் என்று சிலர் சொல்வார்கள். சரியாகவே இருக்கும், எனக்கான வசவுகளை, பெட்டி போட்டு, உச்ச ஸ்தாயியில் சொல்வாள் என்பார்கள்.

நீங்க சாப்பிட்டா நல்லது.

அதான் சொன்னேனே. இது எனக்கானது இல்ல.

நான் வேணா உங்களுக்கு ஒரு டீ போட்டு கொண்டு வரவா?

உன்ன இங்க இருக்கிற சமையல் அறையில உள்ள விட மாட்டாங்க, தெரியுமில்ல.

அதெல்லாம் டீன் கிட்ட சொல்லிக்கலாம்.

என்ன சொன்னாலும், அதுக்குள்ள போக அனுமதி குடுக்க மாட்டாங்க.

சரி, நீங்களும் வாங்க, உங்களையும் கூட்டிகிட்டு போறேன். நீங்க எனக்கு சமைச்சு குடுங்க. ரெண்டு பெரும் சாப்பிடலாம்.

அவள் முகம் விரிந்தது. உதடுகளுக்குள் மெல்லிய பூ ஒன்று பூத்து அடங்கியது. அதன் பின்னர் ஒரு சேர ஒரு வசவும் வந்து இறங்கியது. 

அங்க போக எனக்கு இஷ்டம் இல்ல.

நீங்க இங்க வர்றத்துக்கு முன்னாடி, நிறைய நேரம் கிச்சன்ல தான் இருப்பீங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். உங்களோட குறிப்புல எழுதி இருந்தது.

அது செத்தவங்களோட நினைவுக்குறிப்பு மாதிரி. அங்க தான் நான் இருந்தேன், அங்க தான் நான் இறக்கவும் செஞ்சேன்.

ஏன் இப்படி பேசுறீங்க. உங்களுக்கு அப்படி என்ன கோவம். 

இந்த நேரத்தில் கேட்டு விடுவதே உத்தமம் என்று நினைத்தேன்.

உங்களுக்கு உடம்புல என்ன பிரச்சினை இருக்குன்னு தெரியும் இல்லையா. அதுக்கு காரணம் என்ன, உங்களோட கோபம். அது யாரு மேல வேணாலும் இருக்கட்டும், ஆனா அதை ஏன் உங்க மேலயே காட்டிக்கறீங்க. உங்க கோபம் உங்களைத்தான் பலி கேக்குது. 

சில நிமிட மௌனங்கள். அவள் இதன் பின் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இப்போது நான் செய்து கொண்டிருப்பது தேவையற்றது. இதனால் அவளின் கோபம் இரண்டாகலாம், இல்லை ஒன்றுமில்லாமல் போகலாம். 

பேச ஆரம்பித்தாள்.

எனக்கு எத்தனை பசங்கன்னு உனக்கு தெரியும் தானே?

ஆமா 

அவங்க என்னை கொண்டு வந்து விட்டாங்கன்னும் தெரியும் தானே?

ஆமா 

எதுக்குன்னு தெரியுமா?

தெரியல 

அவங்க அப்பாவை நான் கொன்னுட்டேன்னு அவங்களுக்கு கோபம்.

சில நிமிட மௌனங்களை நான் தயார் செய்து கொண்டிருந்தேன். அதனுள் ஆச்சரியங்களையும் கோர்த்துக்கொண்டேன். கொஞ்சம் பயமும் சேர்ந்து கொண்டது. ஆனாலும், வயதுக்கேற்ற பலம் இருந்தது. 

நீங்களா? ஏன் அப்படி செஞ்சீங்க.

எனக்கு சமையல் அறை அவ்வளவு பிடிக்கும். அங்க தான் பொறந்துட்டமோ அப்படின்னு கூட யோசிப்பேன். அங்க தான் உறுதியா நான் நானாவே இருப்பேன்னு ஒரு சத்தியம் எனக்குள்ள இருந்தது. என்னோட அம்மா எனக்கு அவளோட சந்தோஷத்தையும், சோகத்தையும், எனக்கான பாடத்தையும் அங்க தான் சொல்லித்தந்தா. அங்கேயே இருன்னு சொல்லவே இல்ல, ஆனா அவ அங்க தான் இருந்தா. அதுனாலயே என்னவோ எனக்கு அங்க இருந்தாலே போதும் அப்படின்னு இருக்கும். அதுக்காக வேலை செஞ்சிகிட்டே இருப்பேன்னு அர்த்தம் இல்ல. சமைக்க பிடிக்கும், அதையும் தாண்டி அந்த அறையில ஓடுற ஈர்ப்பு விசைக்கு நான் அடிமையா இருந்தேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் அறை அப்படித்தான் இருக்கும். அங்க தான் உதிக்கும், அங்க தான் அஸ்தமிக்கும். வீட்டுக்கு யாராச்சும் வந்தா கூட, ஒரு நிமிஷம் பேசிட்டு, இதோ இருங்க வந்துடறேன்னு சொல்லிட்டு எதையாச்சும் உருட்டிகிட்டு இருந்தா, வீட்டுக்கு வந்தவங்களும் அங்க வந்து பேசிகிட்டு இருப்பாங்க. ஒரு வகையில அதை நானே டிசைன் செஞ்சிக்கிட்ட கூண்டு. பிடிச்சுதான் இருப்பேன். 

அப்புறமென்ன, அந்த அறைக்கு மேல இவ்வளவு கோபம்.

அங்க தான் எனக்கு காதல் வந்தது. அவருக்கு என் மேல காதல் வரணும்னா, அவர் எனக்கு காதல் வர்ற இடத்துல இருக்கணும்னு நல்லாவே தெரிஞ்சு வெச்சிருந்தார். ஆனா அங்க தான் அவனோட கடைசி நிமிஷமும் இருந்தது.

அவரிலிருந்து அவன் மாறியதில் தான் எல்லா கோலங்களும் வரையப்பட்டிருந்தன. 

ஏன் அப்படி செஞ்சீங்க?

சுதந்திரம் கிடைச்சப்புறமும் கூட நான் போய் வெள்ளைக்காரனை குத்தி கொன்னு போடறேன்னு சொன்னா எப்படி இருக்கும்?

புரியலையே 

வெள்ளைக்காரன் தப்பு பண்ணான். அவனை எதிர்த்து போராடினோம். அதுல பல துக்கமான சம்பவங்கள் இருந்தது. ஆனா ஒரு ராத்திரி, எல்லாம் சரிதான் நான் கெளம்பறேன்னு கிளம்பிட்டான் இல்லையா. அதோட அவனுக்கு புரிஞ்சது. போராடின போராட்டமெல்லாம் அதோட நின்னுடுச்சு. அதுக்கு பிறகும், தீடிர் தீடிர்னு ராத்திரி எழுந்திருச்சு நீ எதுக்கு அப்படி பண்ண, உன்ன சும்மா விடமாட்டேன் அப்படின்னு கிளம்பினா அந்த வெள்ளைக்காரன் உன்ன பைத்தியக்காரன்னு நினைக்க மாட்டானா..

ஆமாம், நினைப்பான்.

அது தான் அங்க நடந்துச்சு.

தப்பு ஒன்னு நடந்தது, பல வருஷம் முன்னாடி. அது கடைசியில வடிஞ்சு, சுத்தமா மன்னிப்பெல்லாம் கேட்டு, மறந்து போச்சுன்னு நெனச்சா, அதையே ஆறு மாசத்துக்கு ஒரு முறை கிளறினா என்ன நடக்கும்?

கோபம் வரும்.

அம்பது வருஷத்துக்கும் அதையே பண்ணா?

கசப்பா தான் இருக்கும்.

ஒரு நாள், அதே சமையல் அறையில தான், முப்பதாயிரத்து முறையா அந்த பிரச்சினை வந்தது. திரும்ப பேசினேன். முதல் முறையா எதிர்த்து பேசினேன்.

மூண்ட தீயை என் முன்னே மூட்டி அந்த வெளிச்சத்தை எனக்கும் வெளிப்படுத்தினாள்.

எல்லாம் புரிந்தது. 

அதன் பின் தான் அவளை இழந்துவிட்டிருந்தாள். ஆனாலும் அவளை அந்த சமையல் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தோன்றியது.

டீன் என்னிடம் பேசினார். இது தேவை இல்லாதது என்றார். இல்லை, அவளுக்கு அங்கே ஒரு விடிவு இருக்க வாய்ப்புண்டு என்றேன்.

கையையும், காலையும் கட்டி வைத்து, அவளை சக்கர நாற்காலியில் தான் கொண்டு சென்றோம். அங்கு சென்றபின் அவளுக்கு சிறிது உதறல் எடுத்து. அவளின் அறையை விட, இந்த அறை பெரியது. ஆனாலும், அவளின் நடுக்கம் குறையவே இல்லை.

ஒரு இரண்டு மணி நேரம் இருந்திருப்போம். சிறிது அமைதியானாள்.

முடிவு செய்தபடி, அவரின் மகனிடம் தொலைபேசியில் பேசி, அவளுக்கு பிடித்த (அவளின் முறைப்படியே) வண்ணமில்லாத கேசரியை கிண்டி வைத்திருந்தோம்.

ஒவ்வொரு கரண்டியாக கொடுத்தோம். தளர்ந்து கொண்டே இருந்தாள். இயக்கம் தடைப்பட்டது போல இருந்தது. திரும்ப அறைக்கு சென்று படுத்தாள்.

அடுத்த நாள், அவள் கொண்டிருந்த சிறிய ஊசியை அவளின் தொண்டைக்குழியில் அவளே செலுத்திக்கொண்டு இறந்திருந்தாள்.