ஒரு முறை தாம்பரத்தில் இருந்து பிரெஷர்ஸ் கால். ஒரு ஐநூறு பேர். வழக்கம் போல, அவமானமே மிஞ்சும். குரூப் டிஸ்கஷனில் மற்றவர் வாயை மட்டுமே பார்த்து விட்டு வெளியேற வேண்டிய நிலைமை தான் வரும் என்றே நினைத்தேன். அதுவே நடந்தது. ஆனால், ஒரு நல்ல விஷயம், அங்கே கடைசி கட்டம் வரை அனைவரையும் அழைக்காமல் இருந்தாலும், மதிப்பெண் அடிப்படையில் சில பேரை மட்டும் கடைசி கட்டம் வரை கொண்டு சென்றார்கள். அதனால், கடைசி கட்டமான, நேர்முகத் தேர்வு. கேள்விகள் கேட்டு திளைத்தார் ஒரு தாத்தா. பாதி சொல்லி பாதி சொல்லவில்லை. அடுத்த நேர்முகத் தேர்வில், நடுத்தரவயது பெண்மணி என்னை துளைத்தெடுக்க வந்தது போன்றே இருந்தார். சரி, சீக்கிரம் எனக்கான அழுத்தமான நொடிகளை கொடுத்து முடியுங்கள். போய் சேரலாம் என்று இருந்தேன். அவர் கேட்ட கேள்வி எதிலும், தகவல் தொழில்நுட்பம் இல்லை. என்னை பற்றியே தெரிந்து கொள்ள முயன்றார். கடைசியில் கேட்ட கேள்விக்கு மேல் அவர் பேசவே இல்லை. ஆனால், நான் பேசிக்கொண்டே இருந்தேன். கேட்ட கேள்வி, நீங்கள் கடைசியாய் படித்த புத்தகம் எது, ஏன் பிடிக்கும். நான் சொன்னது, ஸ்ரீரங்கத்து தேவதைகள். அதில் இரண்டு மூன்று எபிசோட் எடுத்து சரளமாக சொல்ல ஆரம்பித்து விட்டேன். அவரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார். கடைசியில் ஒரு புன்னகையோடு அனுப்பிவைத்தார். வேலைக்கு சேரும் படி கடிதமும் வந்தது.
ஒரு நாள், அவரை சந்தித்தபோது கேட்டேன், எப்படி என்னை தேர்ந்தெடுத்தீர்கள் என்று. சுஜாதா என்றார்!!!
சுஜாதாட்ஸ்!! மிக அருமை!