சாம்சங்

 தனித்திருந்த காலங்களில் அந்த மனிதனின் முகம் கண் முன் வந்து போகும். எத்தனை எத்தனையோ காட்சிகள், சம்பவங்கள், வார்த்தைகள் மறந்து போயிருக்கிறது. ஆனால், இது மட்டும் நினைவில் நங்கூரம் போட்டு நகர மாட்டேன் என நிற்கிறது. கையளவு தான் மூளை என்கிறார்கள். அதில் விறல் அளவு இந்த நினைவு மட்டும் இருக்கிறது போல. பின்னே எப்படி நீங்கும்? விரல் அளவு நினைவுகளில் பல குழப்பங்கள் தாண்டி அந்த நினைவு. கலங்கிப்போகாமல் அப்படியே மிதந்துகொண்டு இருக்கிறது.

அந்த காலத்தில் பஸ் இருந்தது. இந்த வார்த்தைக்கே நீங்கள் சண்டைக்கு வரலாம். இந்த காலத்தில் இல்லையா? பஸ் என்ன மூன்றாவது கண்ணா, விதந்து சொல்ல? இதை எல்லாம் சொல்ல வந்துவிட்டாய் என உங்கள் மனது என்னை திட்ட தயாராகலாம். அது ஒவ்வொன்றும் உண்மை தானே. அந்த காலத்தில் பஸ் இருந்தது தானே. இந்த காலத்திலும் அது இருப்பது, கடந்த காலத்தை எந்த விதத்திலும் அழித்துவிடாது. 

கவனத்துடன் என் விரல் அளவுள்ள நினைவுகளுக்குள் நீந்த தயாராகுங்கள். விரல் வலித்தால் உங்களை நானே இறக்கி விடுகிறேன். அந்த காலத்தில் பஸ் இருந்தது. இப்போது நீங்கள் திட்டப்போவதில்லை. அதையும் தெரிந்தே தான் சொல்கிறேன். காலையில் அம்மா செய்யும் இட்லியும், தேங்காய்ப்பொடியும் சமையல் அறையின் பல கேள்விகளை எதிர்கொள்ளும். சமையல் அறை கேட்கும் கேள்வி எல்லாம் ஒன்று தான். அந்த இட்லியை பார்த்து கேட்கும். உனக்கு இப்படி ஒரு இடம் கொடுத்திருப்பது அநியாயம். பக்கத்து வீட்டு அம்மணி ரசம் வைத்தால் தெருவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் மூக்கை கழட்டி அந்த அம்மணியின் சமையல் அறையில் இரண்டு நாட்களுக்கு போட்டுவிடுவார்கள். அந்த சமையல் அறைக்கு அவ்வளவு கர்வம் வரும். என்னிடம் தான் ருசி உருவாகிறது, நானே ருசியின் ராஜராணி. ஆனால், நான், இந்த இட்லிக்கு தான் கடன் பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாள் காலையும் இட்லி. ருசி, இல்லை. மணம், இல்லை. வண்ணம், இல்லை. ஆனாலும், அதையே தான் சமைத்து சமைத்து என் கழுத்தை நெரிக்கிறாள் என அம்மாவை கடிந்து கொள்ளும். 

இன்னும் என் விரலில் இருக்கிறீர்கள் தானே? இருப்பீர்கள். நான் இன்னும் இறக்கிவிடவில்லை.

எவர்சில்வர் பாத்திரத்தில் அம்மா இட்லியையும், அதன் மேல் எண்ணெய் விட்ட பொடியையும் நிரப்பி அனுப்புவாள். என் துணிப்பையில் அதை போட்டுக்கொண்டு, ஒண்டி மாமரத்தின் மாபெரும் பாதத்தில் வந்து நிற்கவேண்டும். சரியாக ஏழரை மணிக்கு நின்றுவிடவேண்டும். அந்த காலத்து பஸ் அப்போது தூரத்தில் திரும்பும் காட்சி வெளிப்படும். அப்போது இன்னும் சிலர் என்னுடன் நின்று கொண்டிருப்பார்கள். என் வயது ஒத்த சில பள்ளி தோழர்களும் நின்றிருப்பார்கள். ஒரு புன்முறுவலோடு என் கதவு மூடிக்கொள்ளும். எனக்குள் இருக்கும் நட்பு அறை மிகச்சிறியது. அங்கு இருவர் நிற்கலாம். மூச்சு விடமுடியும். மூன்று பேர் நின்றால் மூச்சு முட்டும். நான்கு பேர் நின்றால் ஒருவரை ஒருவர் அவச்சொல் சொல்லி அவர்களே வெளியேறி விடுவார்கள். அவ்வளவு தான் நான் கொடுத்திருந்த இடம். பெரிதாக்க முயலவில்லை. பெரிதாக்கி என்ன பயன்? கூட்டம் கூடி விடும். கூட்டுநட்பு குடும்ப அரசியல் எனக்கு வராது. 

பஸ் அதன் புன்முறுவலோடு வந்து நிற்கும். அதன் புன்முறுவலில் சாம்பல் நிறப்புகை தான் அதிகம். கொஞ்சம் நெடி அடிக்கும். ஆனாலும், சுகந்த மனம். மண்ணையும், காற்றையும் அது நீண்ட நாட்களாக காதலித்ததின் பயன். முண்டி அடித்து ஏறும் வழக்கம் அந்த பஸ் ஸ்டாப்பில் யாருக்கும் இல்லை. அவர்களுக்கு மட்டும் எங்கிருந்தோ வேறு ஒரு ஜென் மனநிலை.வாய்த்திருந்தது. அலுவலகத்திலும் அப்படியே ஜென்னர்களாகவே இருப்பார்களா?  

நான் எப்போதும் கியூவில் நடுவிலேயே இருந்திருக்கிறேன். வாழ்க்கையில் இருப்பது போல. முன் நிற்பதும் வலிக்கிறது, பின் நிற்பதும் பிடிக்கவில்லை. நடுவிலேயே சாந்திசாந்தி என நின்று இருக்கிறேன். அப்படி ஏறும்போது என் ஸ்டாப்பில் எப்போதும் நான்கு சீட்டுகள் காலியாக இருக்கும். அது என்னமோ தெரியவில்லை, எப்போதும் ஏறும் கூட்டம், அவர்களுக்கென சீட்டை பட்டா போட்டுக்கொண்டுவிடுகிறார்கள். எப்போதாவது விட நேர்ந்தால், அன்றைய நாள் அவர்களுக்கு வாட்டசாட்டமாக இருப்பதில்லை. சோர்ந்து போகும். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது பஸ் சீட் வரை வியாபித்திருக்கிறது. அல்லது, வியாபிக்க வைக்கும் அளவுக்கு வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு விட்டார்கள். அம்மாவுக்கு டீ வாசம் வந்தால் மட்டும் போதும், இல்லாவிட்டால் தலைவலி வந்துவிடும் போன்றது போல அது. 

எனக்கும் ஒரு சீட் தெரிந்துவைத்திருந்தேன். நான் நடுவில் இருப்பது என்று சொன்னேன் அல்லவா? அந்த நடு சீட் எப்போதும் எனக்காக ஒரு கிழியலை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கும். அதில் உட்கார யாரும் விரும்புவதில்லை. நைந்துபோன பச்சை சீட், கிழிந்துபோய், உள்ளே இருக்கும் பஞ்சை இப்போது வெளியேற்றவா அல்லது பிறகு வெளியேற்றவா என்று பல வருடங்கள் காத்திருந்து இன்னும் வெளியேற்றாமலே இருக்கும்.

ஜன்னல் சீட் எனக்கு பிடித்தம். ஆனால், உட்கார மாட்டேன். காரணம் அவன்.

அவனுக்கு இருக்கும் ஒரு ஐம்பது வயது. அவன் என்பதில் மரியாதையை குறைப்பது போல தெரிந்தால், அது சரி தான். அவனுக்கு அந்த எதையையும் சுட்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

முதலில் ஆரம்பித்த அறிமுகம் எல்லாம் அரதபழசானது தான். எங்க படிக்கற, எங்க வீடு, நல்லா படிப்பியா, என்ன ரேங்க், எந்த சப்ஜெக்ட் பிடிக்கும், என்ன சினிமா பாத்த.. இப்படித்தான்… அவனுக்கு கேள்வி கேட்பது வழக்கம், எனக்கு பதில் சொல்வது வழக்கம். பெரியவங்கன்னா மரியாதையை குடுக்கணும், என்று சொல்லிக்கொடுத்த பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை அல்லவா. ஆற்றினேன். தினமும் ஆற்றுவேன். அவனுக்கு என்னிடம் மட்டும் பேச அவ்வளவு விருப்பம் போல.

ராஜா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்குவான். அங்கே தான் அவன் ஒரு பாட்டா ஷோரூம் வைத்திருந்தான். அவன் அணியும் சட்டை, பாண்டுகளும் கிட்டத்தட்ட வெள்ளை, ஊதா நிறங்களிலேயே இருக்கும். கடையில் இருக்கும்போது செருப்போடு செருப்பாக இருப்பான் போல.

முதலில் கேள்விகளில் ஆரம்பித்த அறிமுகம், பிறகு தேவை இல்லாத இளிப்புகளை கொண்டுவந்தது. அவன் எவ்வளவு இளித்தாலும் நான் திரும்ப ஒரு புன்முறுவலைக் கூட கொடுத்ததில்லை.

அன்றொரு நாள் அவன் கேள்விகள் கைகளில் இருந்தது போல. அவன் கைகள் என் மேல் பட்டது. சுர்ரென இழுத்தது. அது என்னவென்று இன்று வரை புரியவில்லை. கைகளை தட்டிவிட்டேன். நான்கைந்து முறை இருக்கும். பெற்றோர் சொன்ன மரியாதையும், நான் எப்போதும் நடுவிலேயே நிற்கும் முறைகளையும் வைத்துப்பார்த்தால், நான் அங்கே கூப்பாடு போட்டு, அக்கம் பக்கத்தில் இருக்கும் அக்கா, அண்ணாக்களை கூப்பிட்டு அந்த ஆள் இப்படித் தொடுகிறான் என சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை.. நான் தான் நடுவிலேயே இருக்கிறேனே. அந்த நடு என்பது துணிச்சலுக்கும், எதற்கும் உதவாத பயத்திற்கும் உள்ள நடு. தட்டிவிட்டு மெதுவாக அங்கிருந்து வெளியேற மட்டும் தான் முடிந்தது. என் நட்பு வட்டாரம் பற்றி சொன்னேன் இல்லையா, அதில் இதையெல்லாம் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு என் அறையில் இடம் இருக்கவில்லை. சொல்லவும் இல்லை.

பயந்து பயந்து ஓடவில்லையே தவிர, இருக்கும் கையளவு மூளைக்குள் இருந்து, வேறு எந்த பஸ்ஸில் எல்லாம் போகலாம் என்று போகலானேன். சில நேரங்களில் பின் வந்தான். சில நேரங்களில் இன்னொரு இடத்தில் இருப்பான், அந்த இடத்தில் என் உடல்வாகுடன் இருக்கும் இன்னொரு என் வயதின் ஒத்த ஒருவரிடம் இருக்கும். அங்கு சென்று சொல்லக்கூட யோசனை. நடுவில் நிற்கிறேன் இல்லையா.

எல்லாம் சென்றது. பஸ் மறைந்தது. நான் வளர்ந்தேன். அவனும் இறந்திருந்தான். அவ்வப்போது அந்த பாட்டா ஷோரூம் வழியே செல்லும்போது மனம் இருட்டுக்குள் குதிக்கும். அவனும் இல்லை, அந்த கடையும் இப்போது பாட்டாவாக இல்லை. சாம்சங் ஆகி விட்டது. மூளையும் அப்படி ஆகி இருக்க கூடாதா என்ன. ஆவதே இல்லை.