கனவு

அவரை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. சொல்லப்பட்ட தகவல்களை வைத்துப்பார்த்தால், இவரைப்போல் இவர் மட்டும் தான் இருக்க வாய்ப்பு உண்டு. வேறு எவரும் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றை பல வருடங்களாக செய்து கொண்டிருப்பதாக அலுவலகத்தில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். யாரிடமும் முகம் கொடுத்து பேசாத நான், அவரிடம் பேசப்போகும் ஆசை வழிந்து கொண்டிருந்தது.

அலுவலக நண்பர்கள் வேண்டாமே என்று தான் அறிவுறுத்தினார்கள். வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் என்னை அவமானப்படுத்திவிடப்போவதும் இல்லை, நேரத்தை வீணாக்கி விடப்போவதுமில்லை. சென்று தான் பார்க்கிறேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, அவரின் விலாசத்தை குறித்துக்கொண்டு அன்று இரவு என் அறைக்குப்போய் தூங்கினேன். அன்றிரவு தூக்கத்தில், கனவெல்லாம் அலறலாகவே இருந்தது. ஒரே கூச்சல். மண்டை உடைந்துபோகும் அளவுக்கு குமுறல். ஒரு நொடித்துளி கூட அமைதி இல்லை. அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். மண்டைக்குள் இருந்த கனவுக்கூச்சல் எல்லாம் வெளியில் இருந்த கூச்சலுக்கு முன் பரந்துவிரிந்திருந்தது. மண்டையை நாலு முறை உலுக்கியத்தில், சில கூச்சல்கள் கீழே சிதறியதை காண முடிந்தது. அதில் ஒன்று அலுவலகத்தில் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் மேலாளர். இன்னொன்று, சின்ன அத்தையின் புலம்பல் கூடிய கூச்சல். இவை இரண்டும் தான் இறங்க வேண்டிய அளவுக்கு மெல்லியதாக இருந்தது. மற்றதெல்லாம் அடர்த்தி நிரம்பி மூளைக்குள் ஒட்டிக்கொண்டிருக்கிறது போலும். அடுத்த நாள் இரவை எண்ணி இப்போதே தலை வலிக்க ஆரம்பித்தது.

சரி, அவரை பார்த்துவிட்டு பிறகு இதையெல்லாம் பைசல் பண்ணிக்கொள்ளலாம் என விரைந்து சென்று, இரண்டு நிமிட குளியலை போட்டுவிட்டு, இருப்பதிலேயே சாந்தமாக இருந்த ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, அதற்கும் சாந்தமாக இருந்த பேண்ட்டையும்  போட்டுக்கொண்டு கீழ் இறங்கினேன். வீட்டு முதலாளி வீதியில் குப்பை அள்ளும் அண்ணனை ஓயாமல் திட்டிக்கொண்டிருந்தார். அந்த அண்ணன் திரும்ப வசைகளை அலங்காரப்படுத்தி, வசைகளுக்கெல்லாம் ராஜாவான உறவின் முறை வசவையும், உறுப்பு முறை வசவையும் அள்ளித்தெளித்துக்கொண்டிருந்தார். கணக்கு பார்த்தால், இவர்களின் கனவுக்கூச்சல் இன்றைக்கு இரவு என்னை விட அதிகமாக இருக்கும் போல் இருந்தது.

18-B பிடித்து, சேர வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்தேன்.

அவருக்கு தொலைபேசினேன்.

சார், உங்க அலுவலகத்துல குமாஸ்தாவா சேர்ந்திருக்கேன். உங்களை பார்த்து சில விஷயங்களை கத்துக்கிட்டு போகலாம்னு வந்திருக்கேன். இங்க காலேஜ் பஸ்ஸ்டாப்பிலே இருக்கேன். உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்றீங்களா?

சொல்றேன்.

பக்கமா, தூரமா?

தூரம்.

போனுக்கு மெசேஜ் அனுப்பறீங்களா?

அனுப்பறேன்.

விரைந்து சென்றேன். அந்த வீடு நான்கு ராட்சச வீடுகளுக்கு மத்தியில் எலியின் போந்து போல இருந்தது. இந்த வீட்டினர் மூச்சு விட்டால் அந்த ராட்சச வீட்டினரின் முதுகில் தான் போய் ஓய்வெடுக்கும். அதற்குப்பின் தான் வெளியில் கலக்கும். அவ்வளவு நெருக்கம்.

சார், சார், நான்தான் வந்திருக்கேன்.

வாங்க.

உட்கார வசதி இருந்தது. பள்ளிக்கூட பெஞ்சுகள் போல. வீட்டுக்கு வந்தவர்களை அடக்கி வைத்து பாடம் எடுப்பார் போல.

காபி?

வேண்டாம் சார். வரும்போதே குடிச்சிட்டு தான் வந்தேன். உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கலாம்னு யோசிக்கறேன். கேக்கலாமா?

கேளுங்க.

நீங்க ஒரு வார்த்தை மட்டும் தான் பேசுவீங்கன்னு சொன்னாங்க.

ஆமா

அது சாத்தியமா?

ஆமா

உங்க மனைவி கிட்டயும் அப்படித்தானா?

ஆமா

முதல்ல இருந்தேவா?

ஆமா

அவரின் கடைசி நான்கு வார்த்தைகள், ஆமா என்பதை தாண்டி ஒரு மாத்திரை கூட அதிகமில்லை. அதற்கு பிறகு மூச்சு கூட விடமாட்டேன் என்கிறார். மிகச்சீரான, மெதுவான, ஆழ்ந்த முகம். அதற்கேற்றார் போல், சுவாசமும் கூட. அந்த அறையில் நீக்கமற சூரிய வெளிச்சம் இருந்தது. அவ்வளவு ஜன்னல்கள். வீட்டுக்கு சிமெண்ட் வேலை மிகக்குறைவு.

நீங்க நேர்முகத்தேர்வு எடுக்கும்போது எப்படி சமாளிச்சீங்க?

எழுதிட்டேன்.

எழுதியே, தேர்வாகிட்டீங்களா?

ஆமா

என்னை சொல்ல வேண்டும். அவரை ஆமா சொல்ல வைக்காத அளவுக்கு கேள்விகேட்க எனக்கு தெரியவில்லை. இன்னும் பயிற்சி வேண்டும்.

எதுக்கு இந்த ஒரு வார்த்தை பழக்கம்?

இந்த கேள்விக்கு மாட்டிக்கொண்டுவிடுவார் என நினைத்தேன். பதில் வந்தது,

பழக்கம்.

எங்க இருந்து?

அப்பா, அம்மா

அவங்களும் இப்படித்தான் பேசுவாங்களா?

இல்ல.

பின்ன எப்படி?

பேசவில்லை.

ஓ.. மன்னிக்கணும். அவங்க ஊமையா?

ஆமா.

அப்போ நீங்க நிறைய பேசி இருக்கணுமே?

தேவையில்லை.

நீங்க இப்படி பேசி, மத்தவங்களுக்கு கோபம் வருமே சார், எப்படி சமாளிக்கறிங்க.

வராது.

உங்க கிட்ட பேசின கொஞ்ச நேரத்துலயே எனக்கு கோபம் வருதே சார்.

வரட்டும்.

அப்புறம் திட்டிட்டேன்னா என்ன பண்ணுவீங்க?

திட்டுவேன்.

திட்டுவீங்களா? எப்படி, அதுவும் ஒரு வார்த்தையிலா?

ஆமா.

திட்டிக்காட்டுங்க..

குரங்கு.

அவ்வளவு தானா?

ஆமா.

அவரின் குரங்கு என்ற வார்த்தை பிரயோகம், அந்த சூழ்நிலைக்கு, அவரின் முன் எனக்கு மிகப்பெரிய பாரமாக இருந்தது. ஒரு முறை எனக்கும் நண்பனுக்கும் வார்த்தை தகராறு முற்றிப்போய், நான் பேசவே மாட்டேன் என நினைத்திருந்த கெட்ட வார்த்தை எல்லாம் அருவியாய் கொட்டியது. இரண்டு வாரங்களுக்கு குறையாத கோபம். இவரின் குரங்கு வார்த்தை, அமைதிக்குள் இருக்கும் சொல்லப்படாத கெட்ட வார்த்தைகளை எல்லாம் துணைக்கு கொண்டு வந்து எனக்குள் கொட்டிவிட்ட உணர்வு வந்தது.

சரி சார், எல்லாத்தையும் விட்டுடலாம்.

சரி.

எப்பவோ ஒரு முறையோ, இரண்டு முறையோ உங்களுக்கு உச்சகட்ட உணர்ச்சிகள் வந்து பேசிய ஆகணும்னு இருந்திருக்கும். நாமெல்லாம் மனுஷ ஜென்மமாச்சே, அது இல்லாம இருந்திருக்க முடியாது. அது காதலாவும் இருந்திருக்கலாம், இல்லை உங்க பிள்ளைங்களை முதல் முறை குழந்தையா பார்த்த பொழுதா இருந்திருக்கலாம். அப்போ எப்படி?

கண்ணீர்.

ஏன் சார், இப்படி?

சிரித்தார். நான் கேட்கவேண்டியதை கேட்டு விட்டேன் என நினைத்த நேரத்தில் ஒரு காகிதத்தை எடுத்து எழுத ஆரம்பித்தார். வேகமென்றால் அவ்வளவு வேகம். வார்த்தைகள் பொழிந்து கொண்டு இருந்தன. கையில் கொடுத்தார்.

உங்கள் வருகைக்கு நன்றி. நான் நம்பும் ஒரு கொள்கை, வார்த்தைகள் நம் புலன்களில் இருந்து வரும்போது வெளிப்படும் உணர்ச்சிகள் கொந்தளிப்பு உடையவை. அது காதலாகட்டும், பாசமாகட்டும், சினமாகட்டும். நம் புலன்களுக்கு அவ்வாறு ஒரு வடிவத்தை நம் முன்னோர்களும், நம் சுழலும் கொடுத்திருக்கிறது. வார்த்தையின் பின் இருப்பது மொழி மட்டும் அல்ல. மொழி தாங்கி வரும் உணர்ச்சி. அந்த உணர்வு ஏனோதானோ என்றெல்லாம் வராது. பொங்கி எழுந்து தான் வரும். அது தான் அதன் நியதி. அது இன்னொருவரை கையகப்படுத்தும், இல்லை, கைவிட்டு விலக வைக்கும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ எனக்கு பிடித்தம் இல்லை என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அதை செய்ய எனக்கு பயம். என் வார்த்தைகள் மீது நான் ஏற்றி வைக்கும் உணர்ச்சி நான் உருவாக்கும் ஒரு  குற்றம். நீங்களும் இதை முயன்று பாருங்கள். வாழ்க்கை தெளிவாகும்.

கதவை திறந்து நடையை கட்டினேன். இந்த இரவுக்கு எந்த கனவு எனக்கு வாய்த்திருக்கிறதோ?

One Reply to “கனவு”

Comments are closed.