சாயங்காலம் ஆறேமுக்கால். சரியாக அலாரம் அடிக்கவும், நான் கண் முழிக்கவும், ரயில் நிற்க்கவும் சரியாக இருந்தது. ஒரு பாய் இருந்தா அங்கயே தூங்கிடலாம் போல இருந்தது. ஆனா, வெளியே சில்லென்று உடம்பை ஊடுருவும் காற்று. சரி, வேற வழி இல்லியேன்னு நடக்க ஆரம்பிச்சேன். என்னமோ திரும்பி பாக்க சொல்லி மனசு சத்தம் போட்டுச்சு. மனசு சொல்லி யார் கேக்காம இருப்பா? பார்த்தா, புடவை கட்டிகிட்டு ஒருத்தர் வந்துகிட்டு இருந்தாங்க. எத்தனை நாளாச்சு, புடவை கட்டின ஒரு பொண்ண பார்த்து. மனசுகுள்ள ஒரு முழு அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி (என்னடா ஒரு பொண்ண பார்த்துட்டு அவனவன் நிலா, தாமரை அப்படின்னு அள்ளி விடாம இப்படி சொல்றானேன்னு யோசிக்கறீங்களா. வெளி நாட்டுல இருக்கிற ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் கார சாரமான சாப்பாடுதாங்க சொர்க்கம். அதுனால தான் இப்படி ஒரு நினைப்பு).
இங்க சேலை கட்டுற எந்த இந்தியா பெண்களை பாக்க தீபாவளி, பொங்கல் வரைக்கும் காத்திருக்கணும். எல்லாருக்கும் நிமிஷத்துல உடுத்திகற அமெரிக்க கலாசாரம் தான் புடிச்சிருக்கு. தப்பில்ல. நானெல்லாம் தமிழ் மண்ணு கலாச்சாரம், மண்ணு, மட்டைன்னு இருக்கிறவன். எனக்கு இந்த மாதிரி ஒருத்தர அதுவும் வேலை செஞ்சிட்டு, அசதியா, முதுகுல புத்தக மூட்டை சுமக்கிற மாதிரி, லாப்டாப் எடுத்துகிட்டு வற்றபோ பார்த்தா இப்படி ரெண்டு பத்தி எழுத தோணும் தான்.
அந்த பெண், பின்னால் வந்த ஒரு வயதான இந்திய முதியவரிடம் இருந்த அந்த 10 வயதுள்ள சிறுவனை பார்த்து, ‘அதோ பாரு, அப்பா’ என்று தூரத்தில் கார் மீது சாய்ந்திருந்த ஒருவரை காட்ட, அவன் முதியவரின் கையிலிருந்து விடுபட்டு, ‘அப்பா’ என்று சத்தமிட்ட படியே ஒட, நான் என் வழி பார்த்து நடந்தேன்.
யாருமில்லாத அந்த ரோட்டில் நடந்து போகும் போது ஏனோ அம்மாவின் நினைப்பு, கண்ணில் சிறிது ஈரம் படற ஆரம்பிக்க, வேறு வழி இல்லாமல் இன்று இரவுக்கு நான் சமைக்க வேண்டும். ரூம் மேட் பசியோடு காத்து கொண்டிருக்கும் நினைவு வர வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.