ஆசிரியர் தினம்

ஆசிரியர் இல்லா ஒரு மனிதன், எப்போதுமே ஒரு கேள்வி குறி. தன் வழியில் வரும் அத்தனை மாணவர்களையும் அடுத்த கட்டத்துக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் அவர்கள் சென்ற வழியை பார்த்து கொண்டே அடுத்து வரும் மாணவர்களை வழி நடத்தும் ஒரு நல்ல மனித உள்ளம். அப்துல் கலாம் இப்போது ஜனாதிபதியாக இருந்தாலும் அவருடைய ஆசிரியர் இன்னமும் ஆசிரியர் தான். முகேஷ் அம்பானி இந்தியாவின் மிக பெரிய சாம்ராஜ்ஜியம் நடத்தினாலும், அவருடைய ஆசிரியர் இன்னமும் ஆசிரியர் தான். மிக பெரிய தியாகம். இவர்கள் தொண்டு பணி செய்து கிடப்பதே.

என் சிறு வயது (6 அல்லது 7),

ஜெயா டீச்சர் – ‘அம்மா, அந்த டீச்சர் என்ன அடிக்கிறாங்கம்மா.’

சிறிது வளர்ந்த பின் (8 முதல் 12)

பர்வதராசன் – ‘காலை வணக்கம் அய்யா. இன்னைக்கு நான் உங்க வீட்டுக்கு போயிட்டு தண்ணி எடுத்துட்டு வரேன். சரி, போ. ஆனா, நீ வந்தப்புறம், நீ விட்ட பாடத்த என் கிட்ட வந்து சொல்லனும், புரியுதா.’

விவரம் கொஞ்சம் வளர்ந்த பின் (13 முதல் 17)

கொக்கையா – ‘அய்யா, இன்னைக்கு நான் திருக்குறள் படிக்கல. ஏன்? சைன்ஸ் பாடம் நிறைய இருந்தது.’

கு.க அய்யா – ‘குனித்த புருவமும் யார் யாருக்கெல்லாம் தெரியாது.’ சில பேர் எழுந்து நிற்க, நான் மற்றும் பலர் உட்கார்ந்திருந்தோம். என்னை எழுப்பி, ‘ எங்கே சொல்லு’. தளபதி படத்தில், ராக்கம்மா பாட்டை சிறிது நேரம் உள்ளுக்குள் ஓட்டி விட்டு, குனித்த புருவமும் வரும் போது, உரத்த குரலில் சொன்னது.

நெப்போலியன் அய்யா – நண்பன் சொன்னது, ‘இவர் ஒரு தடவை பாடம் நடத்தும் போது, டியுப் லைட் உடைஞ்சி போச்சு. அவ்ளொ, உணர்ச்சி வசப்பட்டு பாடம் நடத்துவார்’. நான், ‘அப்படியா. சே, நான் அவரோட செக்க்ஷன் இல்லாம போயிட்டனே’

செல்வம் அய்யா – பள்ளியின் விளையாட்டு விழா. 500 மீட்டர் என்று நினைக்கிறேன். எல்லோரும் ஒடும் போது, இவரின் குரல், ‘ஒளி படைத்த நெஞ்சினாய் வா வா வா. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா’

T.P. சார் – ‘என்னா செட்டியார், ஏன் யென் ஸி ஸி பரேடுக்கு வரல.’ ‘ உடம்பு சரியில்ல சார்’ ‘உனக்கெல்லாம், H.M. கிட்ட சொன்னாத்தான் சரியா வரும்’ ‘வேண்டாம் சார். அடுத்த பரேடுக்கு வரேன்’

லுகாஸ் பிரதர் – ‘உங்களுக்கெல்லாம் யோகாசனம் சொல்லி தரேன். சஞ்சய், இங்க வா, இந்த ஆசனம் செஞ்சி காட்டு. எங்க, எல்லாரும் இதே மாதிரி செய்ங்க.’ ‘பிரதர், உடம்பு வலிக்குது, முச்சு விட முடியல’ ‘முச்சு சரியா விடரத்துக்கும், உடம்பு வலி வராம இருக்கவும் தான் இதெல்லாம். வாய மூடிக்கிட்டு செய்ங்க’

ஜான் பால் பாதர் – என் அப்பாவிடம், ‘உங்க பையன கம்ப்யுட்டர் சைன்ஸ் குருப்ல சேருங்க. அவன் அமெரிக்கா போறத்துக்கு நான் உத்திரவாதம் குடுக்கறேன்’

மாசோ அய்யா – ‘என் கிட்ட படிச்ச பசங்க எல்லாம், எதுத்தாப்போல வந்தாலும், சிகரட் அணைக்காமத்தான் போவாங்க. அவ்ளோ மரியாதை.’

தேவதாஸ் – நண்பன் என்னிடம், ‘இவர் வீட்டு வாசல்ல, இவர் அவரோட பொண்டாட்டிக்கு கிஸ் குடுக்கற மாதிரி போட்டோ இருக்கு’. ‘எப்படிடா, பென்ச் போட்டு குடுத்திருப்பாறோ’ ‘என்னடா, ரெண்டு பேரும் அங்க சத்தம் போடறீங்க’ ‘ஒன்னும் இல்ல சார், பென்ஞைன் ஆஸைடு பார்முலா கேட்டேன்.’

லியோ மாஸ்டர் – மறுபடியும் நண்பன் என்னிடம் ‘ஒரு நாள், நான் சைக்கிள வந்துகிட்டே இருந்தேன். இவரு எதுத்தாப்போல வந்தாரு. வணக்கம் சொன்னேன். அவரு எதுவுமே சொல்லல. கொஞ்ச தூரம் போயிட்டு, வணக்கம் சொல்றாரு. அவ்ளோ லேட் பிக் அப்.’

இள வயசின் போது (18 முதல் 21)

ஷபி சார் – ‘ நானெல்லாம் பாம்பே போயிருந்தப்போ, விடாம ப்ளு பிளிம் பார்த்திருக்கேன். ஒரு கட்டத்துல அது அலுத்து போச்சு. மனசு வேற தேட ஆரம்ப்ச்சிடுச்சு. அதுனால தான் நான் இப்போ உங்களுக்கு இப்போ ஷெல்லி நடத்திகிட்டு இருக்கேன். விடாம தேடுங்க. கண்டிப்பா, ஜெயிப்பீங்க’

மீரா மொய்தீன் அய்யா – ‘ஆப்பிரிக்காகாரன் போடறது தான் உலகத்துலயே அதிக வெயிட். ஏன்னா, அவன் சாப்பிடறது அப்படி’

சரவணன் – சக பேராசிரியரிடம், ‘இதோ வற்றார் பாருங்க, இவரு பெரிய பழம். வெல்லூர்ல கம்ப்யுட்டர் கிளாஸ்கெல்லாம் போவாரு’

முகம் மற்றும் பெயர் மறந்து போன என் கல்லூரியின் பிரின்ஸி – என் அப்பாவிடம் ‘மார்க் ஷீட் எல்லாம் அந்த பக்கம் வைங்க. நாங்க சொன்ன ரூபா குடுக்க முடிஞ்சா சீட் கிடைக்கும்.’

முதுகலை (21 முதல் 24)

மகெந்திர நாத் – ‘இந்த This is Nothing But யுஸ் பண்றத நிறுத்திகோங்க’

டேப்னி மேடம் – ‘லக்ஷ்மண், அங்க என்ன பேச்சு. Myths of Software Engineering சொல்லு’

வேலை கிடைத்ததை சொன்ன போது,
சிவகாமி மேடம் – ‘சமத்து. எனக்கு அப்போவே தெரியும், நீ ஒரு நல்ல கம்பனில சேருவென்னு’, நான் அத்தனை கேம்பஸ் இன்டர்வியுவிலும் கோட்டை விட்ட போதிலும்.

வேலை செய்யும் இடத்தில்,

ஆசிரியர் பட்டம் தரிக்காத பல ஆசிரியர்கள் எனக்கு.

எத்தனை ஆசிரியர்கள். எத்தனை விதங்கள்.

சிலரிடம் நல்ல பெயர். பலரிடம் சுமாரான மற்றும் கெட்ட பெயர்.

எனக்கு கற்று கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி.