அவள் அப்படித்தான்…

அவள் இறப்பாள், மறுபடியும் பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள்… அவள் அப்படித்தான்…

அழகாய் முடிகிறது ‘அவள் அப்படித்தான்’ படம். வெளியாகி 28 வருடங்கள் ஆன பின் நான் பார்க்கிறேன். வெளியான நேரத்தில், நான் இந்த உலகத்தில் பிறக்க கூட இல்லை. ஆனால், இன்று விவாதிக்கப்படும் பல விஷயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது பெறும் ஆச்சரியமே.

இப்படி கூட படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது என்னவோ உண்மை தான். இயக்குனர் ருத்ரையாவிடம் நிறைய தில் அப்போதே. நிச்சயம், இந்த படத்தை இப்பொது யாராவது எடுத்தால் அவர்களுக்கு, மக்கள் போராட்டம், கலவரம் போன்ற விருதுகள் கண்டிப்பாக கிடைக்கும். இந்த படம் எப்படி வரவேற்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பலரின் மனதில் இன்றும் இடம் பிடித்துள்ளதை பல நேரங்களில் பார்க்க முடிகிறது.

கலர் படங்கள் நன்றாக வெளிவந்த அந்த காலகட்டத்தில், கருப்பு வெள்ளையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது, ஆச்சரியமான விஷயம். கதையின் தாக்கத்தை இதுவும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியுள்ளது.

நடித்த அத்தனை பேருக்கும் என்ன சொல்வது? அவர்களின் நடிப்பு வாழ்க்கையில் மற்றவர்களிடம், சிலாகித்து சொல்ல நிறைய செய்திருக்கிறார்கள்.

முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை உங்களை உட்கார வைக்கும் வேகமான த்ரில்லர் போல, உங்கள் மனதை கண்டிப்பாக உணர வைக்கும். ஒரு பெண்ணை சுற்றியே படம், அதுவும் அவள் மற்ற சராசரி பெண்கள் போல கண்டிப்பாக அல்ல. ஆண் சமுதாயத்தின் மீது கட்டுகடங்காத கோபமும், பெண்ணுக்கே உரிய, தன் சோகம் கேட்கும் ஆணிடம் தன்னை பறி கொடுக்கும் வித்தியாசமானவள். பல நேரங்களில் இது போன்ற நிழல் நாயகிகள், நம் வாழ்க்கையிலும் வருவதுண்டு. நான் பார்த்த, பழகிய, எனக்கு மிகவும் பிடித்த ஒரு பெண் என் நினைவுக்கு அடிக்கடி வந்தார். நிழல் சில நேரங்களில் நிஜத்தை உரசி பார்ப்பதென்னவோ உண்மை தான். சராசரிக்கும், வித்தியாசத்துக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ள, இப்போதைய, பல பெண்கள் இந்த படத்தில் தங்களை உணர்வார்கள்.

ரஜினி சில காட்சிகள் வந்தாலும், அட போட வைத்திருக்கிறார். நெற்றி பட்டையுடன், அதற்கு சம்மந்தமில்லாத பல விஷயங்களை பேச வைத்திருப்பது, இயக்குனரின் திறமை. அதை சுப்பர் ஸ்டார் கையாண்டுள்ள விதம், அதை விட திறமை. கமல், சொல்ல என்ன இருக்கிறது. பல இடங்களில் கண்களால் மட்டுமே நடித்துள்ளார். இவரை வேட்டையாட விளையாட விட்டுள்ளது, இந்த கால கமர்சியல் கட்டாயம். Sri Priya, இவர் நடித்து அதிகம் பார்த்ததில்லை. இந்த படம் பார்த்த பின், இவரை தவிர்த்து யாராவது செய்திருந்தால் ???

இளையராஜா. எப்போதும் போல ரசிகனின் மன அரியாசனத்தில் ராஜாங்கம் நடத்துகிறார். பாடல்களை விட, பல இடங்களில் நுட்பமான பின்னிசை கேட்க கேட்க பிரமிப்பு.

கத்தி, காதல் என்ற வட்டத்துக்குள் சிக்கி கொண்டுள்ள இன்றைய திரைப்படங்களை பார்த்து பார்த்து சிவந்த கண்களுக்கும், மனதுக்கும் இந்த பழைய படம் நிச்சயம் ஒரு ஆறுதல்.


4 Replies to “அவள் அப்படித்தான்…”

  1. ya. Ruthraaiya is my uncle’s close friend. i saw him when i was very young. studious, strong conceputual human personality.
    one of my best pick in tamil motion pictures.

    rajini, kamal , sripriya @ their best. some of the statements what rajini makes is too good like prejuiced women etc etc.

Comments are closed.