மடி

இறந்த பின் 
நான் முன்பிருந்த 
இடத்திற்கெல்லாம் 
சென்று வரலாம் 
என்றொரு வரம் 
கிடைத்தது
ஒவ்வொருவர் மடியிலும் 
ஒரு முறை கிடந்து வந்தேன் 
மனைவியின் மடியில் 
இன்னும் என் வாசம் 
சுற்றிக்கொண்டு இருந்தது 
மகனின் மடியில் 
என் ஒற்றை 
நரை முடி தள்ளாடிக்கொண்டிருந்தது 
தந்தையின் மடியில் 
என் எச்சில் 
உலர்ந்து கிடந்தது 
தாயின் மடியை 
தேடித்தேடி 
அலைந்தேன் 
இன்னொருவன் சொன்னான் 
தாயின் மடி எப்போதும் கிடைக்காது 
அவளுக்கு நிரந்தர வரம் உண்டு 
மகவுகளுக்கு பின் 
திரிந்தலையும் வரம்
உன் பின்னால் தான் இருக்கிறாள் 
பின் பார்த்தால் 
உனக்கு நிறைய நரை முடி 
தலைக்கு எண்ணெய் வெச்சிட்டே இரு 
என்றாள்