அப்பாவிற்கு மகன் மேல் கொள்ளைப்பிரியம். சொல்லிக்கொள்ளத்தான் மாட்டார். ஆனால், வெளியே சென்றால் கொட்டித்தீர்ப்பார். மழை மண்ணை நெருங்கும், ஆனால் நனைக்காது என்பது போல். நனைத்தால் தான் என்ன. அப்படியே ஆவியாகி விடும். ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு தன்னிலை. அதனுள் போய் கண்டுபிடிப்பதற்குள், ஆவியாகவோ, இல்லை மண்ணோடு மண்ணாகவோ சென்றுவிடுகிறது. அப்பா அப்படித்தான், என்னவென்று கண்டுபிடிப்பதற்குள் அடுத்த விஷயத்திற்கு போயிருப்பார். இப்போது வயது ஆகி விட்டது. கொஞ்சம் நிதானம் தங்கி இருக்கிறது. பல காலம் தங்கி இருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது.
நேற்றைக்கு தான், நான் எழுதுவேன் என்று சொன்னேன். என்ன எழுதற என்றெல்லாம் கேட்காமல், ஓ அப்படியா என கேட்டவர், அம்மா மூலமாக கேட்டு தெரிந்து கொண்டார். நேராக எந்த கேள்வியும் வந்ததே இல்லை. அம்மா தபால் கொடுத்தும் வாங்கியுமே வயதாகி போனார். இருபது வருட வலைப்பதிவில், யாருக்கும் சொல்லிடாத பல தகவல்கள் இருந்தன. எழுத தொடங்கிய நாட்களில், எல்லாமும் அதில் இருந்தது. பக்கத்து கட்டிலில் தூங்கிய நண்பன் தன் காதலியை திட்டியது முதல் கொண்டு. ஒரு நாள், தோழியுடன் கடற்கரைக்கு சென்றதையும், திரும்ப வரும்போது முட்டாள்தனமாக அவள் உட்கார்ந்திருந்த மண்ணை பாண்ட் பாக்கட்டில் போட்டு வைத்திருந்தது எல்லாம் எழுதி வைத்திருந்தேன். இப்போது அந்த தோழி எங்கோ, எப்படியோ யார் வீட்டிலோ, நான் எடுத்த மணலெல்லாம் நியாபகம் இல்லாமல் தனித்திருக்க வாய்ப்புண்டு.
சாதா எழுத்து, ஸ்பெஷல் சாதாவாக மாறி, கவிதைகள், கட்டுரைகள், கோபங்கள், திட்டுகள் என பல மாறுதல்கள் தாண்டி எங்கெங்கோ சென்றிருந்தது. மொத்தமாக நான் பேச நினைத்ததை எல்லாம் அது பேசி இருந்தது. மனைவிக்கு எல்லாம் தெரியும். அவளும் அதில் கால்வாசி பதிவுகளில் இடம் பெற்றிருந்தாள். கல்யாணத்திற்கு முன்னரும் பின்னரும். இதெல்லாம் படித்தால் தான் என்ன? ஆமாம், படிக்கலாம் தான். ஆனால், அப்பா படிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. அவரை விமர்சனம் செய்தும் பல பதிவுகள் இருந்தது. இதை எல்லாம் யாரோ அவரிடம் சொல்லி, என்னிடம் சமாதானம் பேச வருவார் என்று நினைப்பெல்லாம் இருந்திருக்கிறது. எழுத்தில் இருந்து தீர்மானம் வரும் என்றால், இந்நேரம், உலகில் அனைவரும் எழுதிக் கிழித்திருப்பார்கள். பேசவே வேண்டாம், நான் உனக்கு எழுதி வைக்கிறேன். அதை படித்து, உணர்ந்து, என்னிடம் சமாதானமாக போ என சொல்லி இருப்பார்கள். நல்ல வேளை, பேசியே எல்லாமும் நடக்கிறது. என் வீட்டில், பேச தயக்கம். சொல்ல தயக்கம். உணர்த்த தயக்கம். சண்டை போட தயக்கம். தயக்கமில்லாமல் வந்தது, எழுத்து மட்டுமே. எழுத்திக்கிழித்து விட்டேன். இன்னும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
அப்பா கேட்டார், மீட்டிங் ஏதாச்சும் இருக்கா? கொஞ்ச நேரம் பேசலாமா?
இதெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆகி இருந்தது. என்னிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்ற வார்த்தை எல்லாம் அவரிடம் இருந்ததே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
சரிப்பா பேசலாம்.
ரெண்டாயிரத்து நாலுல, நவம்பர் மாசம்…
மனது அடித்துக்கொண்டது. என்ன எழுதி வைத்திருக்கிறோம் என, சரசரவென மவுசை புரட்டினேன். நான்கு பதிவுகள் எழுதி இருக்கிறேன். ஒன்றில், கில்லி பற்றி பதிவு. திரிஷாவை ஜொள்ளி எழுதி இருந்தேன். சரி, அதை கேட்டால் சமாளித்து கொள்ளலாம் என்றால், கடைசி பதிவு, என் அப்போதைய காதலி (இப்போதைய மனைவி) பற்றி இருந்தது. மூளையின் அடுக்கில் எல்லாம் தேடுகிறேன். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று. கிடைத்துவிட்டது. அந்த மாதத்தில் தான் நான் காதலை போட்டு உடைத்திருக்கிறேன். பிரகாஷ் ராஜின், செல்லம் என்ற வார்த்தை மனைவிக்கு சூட்டப்பட்டது வேறு மனதிற்கு வந்து போனது. அவர் அதைப்பற்றித்தான் கேட்பார் என நினைத்தேன்.
அப்பா கேட்டார், உனக்கு என் மருமவள அவ்ளோ பிடிச்சிருந்ததுன்னா, என் கிட்ட நேரா வந்து சொல்லி இருக்க வேண்டியது தானே. ஏன் சுத்தி வளைச்சு, வேண்டாததெல்லாம் இழுத்து, சண்டை போட்டு, ரெண்டு பேருக்கும் பெருசா மனஸ்தாபம் வந்து, தேவை இல்லாம நெறய காயப்படுத்திகிட்டோம். மன்னிச்சிடுப்பா என்றார்.
பரவாயில்லப்பா…
அப்பா கேட்டார், இன்னொன்னு எழுதி இருந்த..
எது?
ரெண்டாயித்து அஞ்சுல டிசம்பர் மாசம்.
அப்பா அப்போது தான் பணிவிடுப்பு பெற்று, ஒய்யாரமாக ஈஸி சேரில் உட்கார்ந்த நேரம்.
அப்பா கேட்டார், உனக்கு நான் ரிட்டையர் ஆனது இவ்ளோ பாதிச்சிருக்கா? ஒரு முறை கூட சொன்னதே இல்லையே. நானும் நீயும் என்னோட வேலை பத்தி பேசிக்கிட்டதே இல்ல. ஆனாலும், அவ்ளோ விஷயம் எழுதி இருக்க. அந்த பியூன் சண்முகம் என்ன ஏமாத்தினதும், அவனை நான் மன்னிச்சி விட்டதையும் கூட எழுதி இருந்த. அத உங்க அம்மா கிட்ட கூட சொன்னதில்ல. நான் திரும்ப வரும்போது, வண்டிய ஒட்டிக்கிட்டு வராம, தள்ளிகிட்டே வந்ததெல்லாம் எழுதி இருக்க. அப்போ நீ என் பக்கத்துலயே இல்ல. ஆனா, சரியாய் எழுதி இருந்த. எப்படி?
தெரியலப்பா. தோணுச்சு..
அப்புறம், தொன்னுத்து எட்டுல, மார்ச் மாசம்…
கருப்பு மாதம் அது. மூளையின் எல்லா அடுக்குகளிலும் அந்த மாதம் விட்டேத்தியாய் உட்கார்ந்திருந்தது. பிய்த்து எறிந்து போட்டபோதிலும், எங்கோ காற்றில் எனக்காகவே காத்திருந்து, திரும்ப வந்து ஒட்டிக்கொண்டிருந்தது.
அதெல்லாம் படிக்காதீங்கப்பா.
எல்லாத்தையும் படிச்சுட்டேன். பேசிடலாமே.
வேண்டாம்பா..
இல்லப்பா பேசிடலாம். இன்னைக்கோ நாளைக்கோ, நான் உனக்கு வெறும் நினைவுகளா தான் இருக்கப்போறேன். அதுல ஒரு நினைவு மட்டும், உனக்கா எனக்கான்னு சண்டை போட்டா எப்படி. தீத்துக்கலாம். நான் ஆலமரம்னு ஒரு இடத்துல எழுதி இருந்த. ஆனா, அந்த ஆணிவேர் எப்பவும் அதோட மண்ணை மட்டுமே தின்னு வாழ்ந்துட்டு இருந்து இருந்தா சரி, பக்கத்து வீட்டு மண்ணை இல்ல தின்னுச்சு. அப்போ, அது தப்பு தானே.
பேசி இப்போ ஒன்னும் நடக்க போறதில்லப்பா.
பேசணும்டா.. பேசியே ஆகணும். இத்தனை நாள் பண்ணல. பேசி இருந்திருக்கணும். எதோ ஒரு அகங்காரம் மனசுக்குள்ள, அப்பன்னா குரல் உசத்தியே பேசணும், எங்க அப்பா என்ன நடத்தின மாதிரி தான் உன்ன நடத்தணும்னு ஒரு அசரீரி கண்ணுக்குள்ள தெரிஞ்சிகிட்டே இருக்கும். அந்த காலத்தோட கெட்ட பழக்கம் அது. இப்போ தெரியுது. ஆனா தெரிஞ்சு ஒன்னும் ஆக போறதில்லன்னு நீ நினைக்கலாம். ஆனா, நீ இத எழுதி வைக்கிற அளவுக்கு இருந்திருக்குன்னா, நான் அத பத்தி சொல்லிடறது சரி தானே.
சொல்லிட்டாலும், ஒன்னும் மாறாதுப்பா..
இல்லைதான். மாத்த வேண்டாம். என்னோட பாவ மன்னிப்பா எடுத்துக்கலாமே…
பாவம் செஞ்ச காலத்துல தாம்பா அது பாவம்.. காலம் கடந்து போச்சுன்னா, அதுக்கு பேரு துரோகம். மன்னிச்சிடுங்கப்பா..
நீ சொல்லலாம். அதுக்கு தான் இந்த நேரம் அமைஞ்சிருக்கு. எதையும் நாம உருவாக்கிறது இல்ல. ஆனா, நேரம் நமக்கு உருவாக்குது. இந்த நேரம், நான் மன்னிப்பு கேக்கணும்னு சொல்லுது. கேட்டுடறேன்.
எனக்கு கேட்டு ஒன்னும் ஆகாதுப்பா..
சரி, கேக்க வேண்டிய இடத்துல கேக்கறேன். நீ சாப்பிட்டியா?
இல்லப்பா.
சரி, நீ சாப்பிடு. நாளைக்கு எல்லாம் தெளிவாகும்.
அடுத்த நாள் காலை, அம்மா எனக்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். திரும்ப அழைத்தேன்.
என்னடா பேசினீங்க ரெண்டு பேரும். அந்த மனுஷன் இப்படி நடந்து நான் பாத்ததே இல்ல. என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்கு வந்து மொதல்ல நீ சாப்பிடு. அதுக்கப்புறம் நான் சாப்பிடறேன்னு சொன்னார். இனிமேல, அவர் நான் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் சாப்பிடுவாராம். எனக்கு வேற, இதெல்லாம் பழக்கம் இல்ல. அவர் திட்டவே ஆரம்பிச்சுட்டார். வேற வழி இல்லாம, முன்னாடியே சாப்பிட்டுட்டேன். ஜீரணமே ஆகல…
லக்ஷ்மண், இந்த Post நல்லா இருக்குங்க. நான் எழுதுறத, அம்மா அப்பா கிட்ட share பண்ண எனக்கும் கொஞ்சம் வெட்கமா இருக்கும். நான் ஆர்வமா, Nov 2004 post இருக்கான்னு தேடுனேங்க. 🙂