காடுகள்

அந்த காலைப்பொழுதில் உடலுக்கும் மேல், அதன் மேலுள்ள காற்றுப்படுகையின் மேல், அதன் மேல் உள்ள அத்தனை வெளிகளின் மேலும் ஒரு அந்தப்புர அழுத்தம் இருந்ததாக பட்டது. இவ்வளவு அழுத்தம் இந்த மானுட மந்தைக்கு தேவையா என்ற கேள்வி வேறு. ஆனால், எவ்வளவு முறை தான் கேட்பது. எத்தனை நாள் தான் கேட்பது. அலுத்துவிட்டது. ஒரு மாறுதலுக்கு இன்றைக்கு சந்தோஷப்பட்டுவிடுவது என்றே முடிவெடுத்தேன்.

எது என்னை ஆற்றுப்படுத்தும் என்பதை விட, எது என்னை வருடிக்கொடுக்கும் என்பதில் பெரிய தர்க்கமே நடந்து கொண்டிருந்தது. இப்போதைக்கு ஒரு தடித்த அதட்டலை போட்டு விட்டு, உள்ளிருந்த தர்க்கத்தை பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, நாளை எடுத்துக்கொள்கிறேன் என்று சமாதானம் சொன்னேன்.

ஒவ்வொன்றாய் தேடினேன். எனக்கான அந்த முதல் ஆற்றுப்படுத்தும் நொடியை. இத்தனையும் நானே தேடித்தேடி அலையும்படி வாழ்க்கை அமைந்ததை எண்ணி வருந்தும்போது, குப்பைத்தொட்டியில் இருந்த தர்க்கம் கேட்டது, நான் துணை வரட்டுமா என்று. இப்போதைக்கு வேண்டாம், நீ குப்பைத்தொட்டியில் நேற்று போட்டிருந்த பாதி பிரெட் துண்டிடம் என்ன வேண்டுமானாலும் செய்துகொள். நான் என்னை பார்த்துக்கொள்கிறேன் என்றபோது, திக்கெட்டிய நினைவில், ஒரு குட்டி வானவில் வெறித்தது. பக்கத்து வீட்டு அக்கா சுடும் சாம்பாரில் கிளம்பிய ஆக்கிரோஷப்புகை என் மூக்கின் நுனியில், உள்ளே வரவா என்று அனுமதி கேட்காமல், அதிரிபுதிரியாக நெடுநெடுவென புகுந்தது. அங்கு முளைத்தது அந்த குட்டி வானவில்.

நாற்பத்தியைந்து வயதில் வானவில் கொஞ்சம் கூன் போட்டிருக்கும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், இன்னும் இல்லை. வானவில்லின் பெயர், சந்தியா. இருபதுகளில் பார்த்திருந்த அந்த வானவில்லின் நிறம் ஒரே நிறம், ரோஜாப்பூ நிறம். எத்தனை நிறம் என்ற வார்த்தைகள். குழம்பித்தான் போய் இருக்கிறேன். தேவை இல்லாத வயதில், வாலிபம் வந்து என்னை சுவீகரி என்றால் இப்படித்தான் மொத்த உடல்நினைவுகளும் குழம்பும்.

உலகமே இப்போது கதவுக்குப்பின் ஆலிங்கனம் செய்துவருகிறது. நேரமே இல்லை என்றவனெல்லாம், இப்போது என்னிடம் மேகக்கணக்கில் நேரம் இருக்கிறது. வேண்டுமானால் எடுத்துக்கொள், இல்லையென்றால், வா நம் இருவரின் மேகக்கணக்கையும் மழையாக்குவோம் என பேசி இருதயம் அறுக்கிறார்கள். அறுக்காத இதயம், சந்தியாவுக்கு.

அந்த ஒரு நொடி, ஒரு நாள், ரோஜாப்பூவை அறுத்து, ரத்தமாக்கி, வேண்டாமென்று தவிர்த்திருந்தோம். என்ன ஒன்று, அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இந்நேரம், பக்கத்து வீட்டு அக்கா சாம்பார், என் வீட்டு சாம்பார் ஆகி இருக்கும்.

எப்படியோ தேடிப்பிடித்து சந்தியாவை கண்டுபிடித்துவிட்டேன். முகப்புத்தகம், கூகுள் எல்லாம் வந்து சுடுகாட்டுக்கு கூட வழி சொல்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில், புதைந்த மனிதன் இப்போது அடுத்த ஜென்மம் எடுத்திருக்கிறானா இல்லை, புழுவாக மாறி அரிசி முட்டைக்குள் புதைந்திருக்கிறானா என்று கூட சொல்லலாம். எல்லாம் விதித்த பயன். ஆனால், இப்போது அந்த விதிப்பயன், சந்தியாவின் வார்த்தை ஜன்னலை திறந்து வைத்து ஹாய் சொல் என்றது.

ஹாய்

எப்படி இருக்க!!! என்ன தெரியுதா?

ஹலோ.. தெரியாதா பின்ன… இத்தனை நாள் எப்படி என்னை தேடிப்பிடிக்காம இருந்த..

தோணல.. தேடல…

இப்போ எப்படி?

இப்போவெல்லாம் கண்டது எல்லாம் தோணுதே. வேற என்ன செய்ய. நேரம் நிறைய இருக்கு.

ஓ, அப்படி… இல்லைன்னா, தேடியிருக்க மாட்ட..

கொஞ்சம் இந்த தேடல் ராமாயணத்தை விட்டுட்டு கொஞ்சம் வேற பேசலாமா?

சரி, பேசு. கேக்கறேன்.

நீ பேச நான் கேக்குறது தான் சரி.

அன்னைக்கு ஏன் அது நடந்ததுன்னு நீ எப்போவாச்சும் யோசிச்சயா?

பதினஞ்சு வருஷம் கழிச்சு பேசறோம். உடனே அந்த விஷயத்துக்கு தான் போவியா?

உன்னோட குரலும், இன்னும் வந்து சேராத உன்னோட வாசனையும், எனக்குள்ள என்ன பண்ணும்னு நினைக்கற.. இது தான் செய்யும். அதைத்தான் கேக்க சொல்லும். சொல்லி தீத்துக்கலாமா?

தீத்துக்கறதுக்கு, இது என்ன நேத்தைக்கு நடந்ததா? முன்னொரு ஜென்மத்துல நடந்தா மாதிரி இல்ல இருக்கு.

அங்க தான் உன் பிரச்சினை. எட்டி பாத்தா பிடிச்சிட்டு வர அளவுக்கு பக்கத்துல தான் இந்த விஷயம் நடந்தது..

பதினஞ்சு வருஷம்…

ஆமா, பதினஞ்சு வருஷம்… அது பக்கமில்லையா? நீ பொறந்து, நாற்பத்தி ரெண்டு வருஷம் ஆச்சு, உன் அம்மா உனக்கு இன்னும் அம்மா’ன்ற நினைவோட இருக்கற காரணம், அந்த முதல் நொடியில் உருவானது. அது உனக்கு நெருக்கம்னா இதுவும் நெருக்கம் தான்.. சரி, சொல்றியா?

சரி, நான் ஏன் சொல்லணும். நீ சொல்லலாமே. நீ ஏன் அந்த விஷயத்தை நடக்க விட்ட…

யாரோட செயலும், எண்ணமும், இன்னொருத்தரோட உந்துதலோட நடக்குதுன்னா, அந்த யாரோ ஒருத்தர் சுயபுத்தி இருக்கிற மனுஷன் இல்ல. நீ அப்படிப்பட்ட ஆளா இருந்ததில்லையே, அந்த நொடிக்கு முன்ன வரைக்கும்.

இதோ பார், ஒரு விஷயம் நடக்க ஒரு கோணம் மட்டும் இல்ல. அதுக்கு கணக்கே சொல்ல முடியாத கோணங்கள் இருக்கும். அத்தனையும் சேர்ந்து வந்து சாட்சி சொன்னதுதான் தெரியும், அது ஏன் நடந்தது, நடந்திருக்கணுமா வேண்டாமா அப்படின்றது எல்லாம்.

நீ சொல்றது எல்லாம் பாத்தா, அந்த கோணங்கள் எல்லாம் இப்போ நடக்க விட்டு பாத்தா, அது சரியா தப்பான்னு சொல்லிடலாம்னு சொல்ல வர மாதிரியே இருக்கே..

நான் அப்படி சொல்லலைன்றத, நீயே படிச்சு பாத்து தெரிஞ்சிக்க…

கொஞ்ச நேரத்திக்கு எல்லாத்தையும் விட்டுடுவோம். நீ எங்க இருக்க, எப்படி இருக்க..

இப்போதைக்கு காடாறு மாசம், நாடாறு மாசம்.

சரி, எந்த காடுன்னு சொல்லு..

பெல்பாஸ்ட்

மிருகங்கள் இல்லாத காடு…

நீ எங்க இருக்க…

நான் இருக்குறது நிஜ காடு..

நிஜ காடுன்னா, அமேஸானா?

இல்ல, சென்னை.

அது எப்போ காடு ஆச்சு?

எனக்கான காட்டுல இருக்கேன்.

புரியும்படி சொல்லேன்..

உனக்கு புரியனுமே..

இல்ல, புரியல…

நான் இருக்குற காட்டுக்குள்ள, இப்போதைக்கு பத்து குட்டி கானகங்கள் இருக்கு. இன்னும் அத சுத்தி முடிக்கல. ஒவ்வொரு கானகத்துக்கும் ஒரு பேர் வெச்சிருக்காங்க… அந்த கானகத்துக்குள்ள பல சிக்கல்கள் இருக்கு. சில நேரங்கள்ள, ஒரு கானகம் என் கூட காதலா இருக்கு. சில நேரங்கள்ள, கோபத்தோட வந்து தன்னையும் என்னையும் எரிக்குது, அதுல ஒரு கானகம், என்ன கூப்பிட்டு வெச்சு அன்பா பேசும், பாடும். நான் உன்னோடவே ஒரு கூட்டுக்குள்ள இருந்துடறேன்னு சொன்னா, இல்ல, அது இங்க இருக்குற யாருக்கும் செட் ஆகாதுன்னு சொல்லி, காட்டின அன்பை எல்லாம் ஸ்லேட் பலகையில படிஞ்ச சுண்ணாம்பை அழிக்கிற மாதிரி அழிச்சிடும். ஆனா, மறுபடியும் ஒரு நாள் கூப்பிட்டு அனுப்பும்.

என்ன மௌனமா இருக்க?

இல்ல, நீ சொல்றத நான் நம்பறது ஒரு பக்கம் இருந்தாலும், அப்படி ஒரு விஷயம் நடந்திருக்குன்னா, ஏன் அப்படின்னு ஒரே கேள்வி கேட்டு கொடையுது.

நடந்திருக்கு தான். நாளைக்கும் நடக்க போகுது தான். அத மாத்த முடியாது. அத மாத்தற சக்தி, அந்த ஒரு நொடி, நீயும் நானும் ரத்தத்துல தோய்ச்ச அந்த ஒரு நொடி. அது மறுபடியும் வந்தா, மாத்தும்.

நான் வேணா வந்து, உன்ன என் கூட கூட்டிகிட்டு வந்துடவா?

எதுக்கு?

பதில் இல்ல. ஆனாலும், செய்யலாம்னு தோணுது.

நீ செய்யலாம், ஆனா, நான் அத ஏத்துக்கிட்டு உன் கூடவே வந்துடுவேன்னு நினைக்காத.

பதினஞ்சு வருஷம்… இந்த காலம் உன்ன ஆத்துப்படுத்தலயா?

படுத்தும். நான் சொன்ன கானகத்துல, முரடான ஒரு காட்டுப்பன்னி இருக்கு. அது என் கிட்ட வந்து, அதோட வலிய தீத்துக்கும்போது, படுத்தும். என்ன, அந்த காட்டுப்பன்னிக்கு நீ கொடுத்த அந்த ஒரு நொடி எவ்வளவோ மேல்.

அந்த நொடிக்கு நானே பொறுப்பு ஏத்துக்கறேன்.

இப்போ பொறுப்பு ஏத்துக்கிட்டு என்ன, நாடாள போறியா?

இல்ல, செஞ்சதுக்கு பிராயச்சித்தம்…

எல்லா சாதாரண மனுஷங்க மாதிரி நீ இல்லாம இருந்த. அந்த அசாதாரணமே என்னை உன் கிட்ட கொண்டு வந்துச்சு. கடைசியில, என்ன நடந்துச்சுன்னு உனக்கே தெரியும். நீ யாருன்னு நீயே, உன் செயலே உன்ன காட்டி கொடுத்துடுச்சு. சரியான நேரம் வந்தா, எல்லா அலங்காரமும் கரைஞ்சு தானே ஆகணும். இயற்கையோட படைப்புல நீ மட்டும் என்ன விதிவிலக்கா.

கொஞ்சம் யோசிச்சு பாக்கறியா?

இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல. நான் இப்போ சிங்கத்தோட கோபத்தையும், எப்பவோ வர அன்பையும், தெரிஞ்சிக்கிட்டேன். யானைய மதம் பிடிக்க வைக்கிற மந்திரமும் தெரியும், காதுக்குள்ள போற எறும்பா இருக்கிற மாயமும் தெரியும். நரி வந்தா, அது தந்திரம் பண்றதுக்குள்ள, நான் அதோட குரல்வளையை கடிச்சு துப்பற அகங்காரமும் கத்து வெச்சிகிட்டேன். இதுக்கும் மேல எனக்கு எதுக்கு, பூ, மரம், சோலை, பட்டாம்பூச்சி எல்லாம். அதெல்லாம் நீயே அனுபவிச்சிக்கோ.

அப்படி ஒரு அனுபவம் தான் என் கிட்ட இருக்கும்னு நீ நினைக்கறியா.

எது இருக்கோ இல்லையோ. நீ இப்போ அனுபவிக்கிறது நிரந்தரம் இல்ல. உனக்கான காடு, உன் பேர எழுதி வெச்சிக்கிட்டு, காத்துகிட்டு இருக்கும். அது கிட்ட நட்பா இருக்குறதோ, இல்ல அதோட கோரப்பசிக்கு நீ இரை ஆகுறதோ, நீ அது கிட்ட நடந்துக்குற முறையை பொறுத்தது. யாருக்கு தெரியும், நீ அந்த காட்டுக்கு வர நேரத்துல, நானே அந்த காடா மாறி இருந்தாலும் இருப்பேன்… 

One Reply to “காடுகள்”

  1. காட்டையே தனமாகக் காட்டிய வித்யாசமான எழுத்து சற்றே
    காட்டுத்தனமாக இருந்தது.கானல் நீராக இருக்கும் பலரின் வாழ்விற்கு தங்களின் கானகம் தாகம் தணிக்கும் ஒரு புண்ணிய பானமானப் பானகமே..! வாழ்த்துகள்!

Comments are closed.