இதன் தொடர்ச்சியாக, கொரோனா கொடுமைக்காலத்தில், படித்து தான் பார்த்தால் என்ன என்று பல பேர் முயல்கிறார்கள். ஆனால், புத்தகம் இல்லாத கொடுமை வேறு. ஆர்வம் இருக்கிறது, நேரம் இருக்கிறது, ஆனால் புத்தகம் இல்லை என்போருக்கு, நான் பகிர்ந்த சில தகவல்களை இங்கே பதிவிடலாம் என நினைக்கிறேன். எக்காரணம் கொண்டும் இருட்டுலக PDF சந்தைக்குள் போகாமல், ஆனாலும், தரமான படைப்புகளை படிப்பது எப்படி என்பது தான் சொல்ல நினைப்பது.
இவை அனைத்தும் நான் படித்து ரசித்தவை. உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம், பிடித்துவிட்டு விட முடியாமல் போனாலும் போகலாம். இல்லையென்றால், என்னது, காந்தி செத்துட்டாரா என்ற ரீதியில் என்னை கமெண்ட்டும் செய்யலாம். உங்கள் விருப்பம் எதுவோ, அதுவே என் பதில்.
இதன் ஒரு சாராம்சம், சொல்ல வருவது பலவும், இன்றைய படைப்புகளை அறிமுகப்படுத்தும்.
நான் தொடரும் மின்னிதழ். ஏன் எனக்கு பிடிக்கும்? இதில் ஒரு சுயசார்பு இருக்கிறது. நான் வளர்ந்த பகுதியில் இருந்து வரும் மின்னிதழ் என்பதால். ஆனால், சராமாரியான நல்ல படைப்புகளே அங்கு காணக்கிடக்கிறது. கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும். சமீபத்திய பெருந்தேவி கவிதைகள் வெகுவாக ரசித்தேன். அழகிய பெரியவரின் யூதா கதையையும் ரசித்தேன். க. விக்னேஸ்வரன் அழகாக தொகுக்கிறார். படிக்கவும் கண்களுக்கு உறுத்தாத, வண்ணங்களுடன், ஓவியங்களுடன், நன்றாக இருக்கிறது.
அகரமுதல்வனின் இந்த மின்னிதழ் பல வகையில் எனக்கு பிடித்தமான ஒன்று. பல சீரிய சிறுகதைகள் எனக்கு பிடித்திருந்தன. என் மனதிற்கு பக்கத்தில், வெஞ்சினம் இருக்கிறது. அத்தனைக்கும் மேல், அ. முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல். ஆழ்ந்து படிக்கும் பல பேருக்கு, இந்த பேட்டி ஒரு நல்ல பெட்டகம்.
இலக்கியம் என்ற ஒரு மெல்லிய கோட்டை இன்னும் கைவிடாமல் இழுத்துக்கொண்டே இருக்கும் ஒரே கடைசி மூச்சு (விகடனுக்கு). சமீபத்தில் நான் ரசித்தது, இலக்கியமும் பித்துநிலையும். இதை ரசித்தது என்று சொன்னால், ஆக்சிமோரோன் ஆகிவிடும். பிறழ்ந்த மனநிலைக்கான சில படிமங்களை புரியும்படி சொல்வதாக எனக்கு தோன்றியது. அதற்கும் மேல், இது சம்மந்தப்பட்ட சில படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. ஆத்மாநாம் பற்றியும், ஜி. நாகராஜன் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
வலைப்பதிவுகள்
நான் அடிக்கடி முட்டி மோதுவது, எஸ்ராவிடமும், ஜெயமோகனிடம் தான். வலைப்பதிவுகளை பொறுத்தவரை அவர்கள் இருவரும் நாளேடுகள் போல வைத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு நாட்கள் விட்டால், பின்தொடர சில நாட்கள் தேவைப்படுகிறது. எஸ்ராவின் தொடர் குறுங்கதைகள் இப்போதைய சூழலுக்கு பெரும் பொருத்தம். கிடைக்கும் ஒரு 20 நிமிடத்தில், நான்கு கதைகளை பிடித்துவிடலாம். எழுபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதிவிட்டார்.
ஜெயமோகனின் புனைவுக் களியாட்டு சிறுகதைகள் என்ற தொடர் பதிவுகளில் எண்ணிப்பார்த்தால் இது வரை 59 சிறுகதைகள். ஒரு கதை படித்து, அதை இறக்கி வைக்கவே, சில நாட்கள் தேவைப்படுகிறது. இதில் எப்படி 59. நான் படித்தவற்றில், இது வரை என் தனி விருப்பம், குருவியும், கூடும்.
இவை தவிர, எனக்கு பிடித்த, நான் படிக்கும் இன்னும் சில வலைப்பதிவுகள்,
பா. ராகவன் அவர்களின் எழுத்துக்கு இருக்கும் பல்வேறு விசிறிகளில் நானும் ஒருவன். ஒரு காலத்தில் இவரின் புத்தகங்கள் மட்டும் தான் வாங்கி இருக்கிறேன். பெரும்பாலும் அபுனைவு வகைகள். ரெண்டு என்ற நாவல் இன்றும் மனதில் நிற்கும் ஒன்று. ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆதியிலே நகரமும் நானும் இருந்தேன், சென்னையை பற்றியது. ஆதி (பிறந்து வளர்ந்தவர்கள்) சென்னைவாசிகளுக்கு சென்னை வேறு ஒரு உருவத்தில் காட்சி அளிக்கிறது.
சாருநிவேதிதாவின் zoom உரையாடலை (புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்) நேற்று கேட்டுக்கொண்டிருந்தேன். பல கதவுகள் திறந்தன. பல வருடங்களாக தொடரும் ஒரு எழுத்தாளர் என்றாலும், இந்த உரையாடல் செய்த விஷயம் தனித்துவமானது. அந்த வழியில் தொடர முயற்சிக்க வேண்டும். அவரின் வலைப்பதிவுகள், பல நல்ல படைப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். எஸ்ரா அதை இடையற செய்வதைப்போல சாருவும் செய்து கொண்டே இருக்கிறார். எந்த உணவகத்தில் எந்த பிரியாணி நம்மை அசத்தும் என்பதை யாரேனும் ஒருவர் நமக்கு சொல்லித்தான் தெரியவேண்டும். அந்த அறிமுகம் தேவை.
பாரதி கிருஷ்ணகுமார். எனக்கு மய்யம் தொடக்க காலத்தில் இருந்தே இவரை பிடித்திருந்தது. அரசியல்வாதி என நினைத்தபோது தான் தெரிந்தது, இவரும் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்பது. மிகவும் பிடித்த ஒரு தருணம், சஞ்சாரம் நாவலுக்கு பவா அவர்கள் எடுத்த உண்டாட்டு விழாவில் இவர் பேசிய உரை. அதுவே என்னை சஞ்சாரம் படிக்க உந்தியது. இந்த உரை இல்லையென்றால், நிதானமாக படித்திருந்திருப்பேன். இவர் எழுதும் வலைப்பதிவில், மிகச்சமீபமாக நா. முத்துக்குமார் தொடர்பான ஒரு தொடரை எழுதி இருக்கிறார். அவனை முதல் முறை பார்த்த போது. நான் ரசித்து படித்த ஒன்று.